மின்விளக்குகள் இல்லாததால் வழிப்பறி-விபத்துகள் அதிகரிப்பு


மின்விளக்குகள் இல்லாததால் வழிப்பறி-விபத்துகள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 9 March 2018 3:30 AM IST (Updated: 9 March 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் மின்விளக்குகள் இல்லாததால் தினமும் விபத்துகள்-வழிப்பறி சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தாம்பரம்,

சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை இணைக் கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் முதல் கட்டமாக மதுரவாயல் வரை 19 கிலோ மீட்டர் தூரம் சென்னை பை-பாஸ் சாலை அமைக்கப்பட்டது.

2008-ம் ஆண்டு தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை செயல்படத்தொடங்கியது. அதன் பின்னர் மதுரவாயல் பகுதியில் இருந்து மாதவரம் வரை இந்த சாலையின் இரண்டாம் பகுதி பணிகள் நடைபெற்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை மூலம் ஜி.எஸ்.டி. சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்துள்ளது. இந்த சாலையில் போரூர் மற்றும் ரெட்டை ஏரி அருகே விநாயகபுரம் ஆகிய இரு இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு இந்த சாலையை பயன்படுத்தும் இரு சக்கர வாகனங்களை தவிர மற்ற அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

மதுரவாயலில் இருந்து தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலம் வரை இந்த சாலையில் எந்த பகுதிகளிலும் மின் விளக்குகள் இல்லை. வாகன ஓட்டிகளின் வசதிக்காக இருளில் ஒளி தரும் ஒளிபிரதிபலிப்பான்கள் மட்டும் சாலையில் பதிக்கப்பட்டுள்ளது. அந்த வெளிச்சத்தில்தான் வாகனங்கள் இரவு நேரங்களில் இந்த சாலையை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

பைபாஸ் சாலை முழுவதும் இருளில் மூழ்கி கிடப்பதால் இரவு நேரங்களில் இந்த சாலையில் பழுதாகி நிற்கும் வாகனங்கள், சாலையில் நிற்பது தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதுடன், சில நேரங்களில் உயிரிழப்புகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதேபோல இருசக்கர வாகனங்களில் தனியாக செல்பவர்கள் இந்த சாலையில் இருளில் செல்லும்போது அடிக்கடி விபத்தில் சிக்கி உயிர்பலியாகும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அத்துடன் இரவு நேரங்களில் இருளை பயன்படுத்தி வாகனங்களில் செல்பவர்களை வழிமறித்து பணம், நகைகளை மர்மநபர்கள் வழிப்பறி செய்யும் சம்பவங்களும் அதிகமாக நடைபெற்று வருகிறது.

இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் கடும் அச்சத்துடனேயே பயணம் செய்யும் நிலை உள்ளது. பைபாஸ் சாலையின் நடுவில் அமைக்கப்பட்ட செடிகள் முறையாக பராமரிக்கப்படாததால் தண்ணீர் இன்றி காய்ந்து கிடக்கிறது. இதே போல சாலை அமைக்கப்பட்டபோது செயல்பட்டு வந்த சாலையோர அவசர தொலைபேசி பூத்களும் உடைந்து நொறுங்கி செயலிழந்து கிடக்கிறது.

விபத்துகள் ஏற்பட்ட இடங்களில் சாலை தடுப்புகள், சேதமடைந்த பகுதிகளும் சீரமைக்கப்படாத நிலையிலேயே உள்ளது. இரவு நேரங்களில் இருளை பயன்படுத்தி எந்தவித அச்சமும் இன்றி இந்த பகுதிகளில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது.

இதற்கு பிறகு தமிழக அரசால் அமைக்கப்பட்ட மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வெளிச்சத்தில் உள்ளது. இந்த சாலையில் சுங்க கட்டணமும் கிடையாது. ஆனால் சுங்க கட்டணம் வசூல் செய்யும் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் இருளில் கிடப்பது வேதனையான ஒன்று என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தில் இது தொடர்பாக பல முறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் இதை பரிசீலனை கூட செய்யவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

சாலை விபத்துகள் மற்றும் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் இந்த சாலையில் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் உடனடியாக மின்விளக்குகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story