பெண்கள்தான் மாற்றத்துக்கு காரணமாக இருக்கவேண்டும்


பெண்கள்தான் மாற்றத்துக்கு காரணமாக இருக்கவேண்டும்
x
தினத்தந்தி 8 March 2018 11:49 PM GMT (Updated: 8 March 2018 11:49 PM GMT)

புதுச்சேரியில் மாற்றத்துக்கு பெண்கள்தான் காரணமாக இருக்கவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரி,

புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா கம்பன் கலையரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அரசு செயலாளர் மிகிர்வரதன் வரவேற்று பேசினார்.

விழாவில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு புதுவை நகராட்சியில் பணிபுரியும் இரவு நேர துப்புரவு தொழிலாளர்களுக்கு தொப்பி மற்றும் டார்ச் லைட்டுகளை வழங்கினார். மேலும் கவுசல்யா, வினோதினி, சந்திரா ஆகியோருக்கு தன்னம்பிக்கை விருதுகளை வழங்கினார். மகளிர் தினவிழாவினையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார். அப்போது கவர்னர் கிரண்பெடி பேசியதாவது.

புதுவை மாநிலத்தில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக இருப்பதாகவும், அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் குறித்தும் முதல்-அமைச்சர் குறிப்பிட்டார். இப்போதுதான் நான் தலைமை செயலாளருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். அதில் பெண்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை தனியாக குறிப்பெடுத்து அனைவருக்கும் தெரிவிக்கும்படி கூறியுள்ளேன். அதுமட்டுமில்லாமல் அதை இணையதளத்திலும் பதிவிட கூறியுள்ளேன்.

புதுவை மாநிலத்தில் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அங்கன்வாடி ஊழியர்கள் மிகச்சிறப்பாக பணியாற்றுவதும் எனக்கு தெரியும். அவர்களை பயன்படுத்தி பெண்களின் பாதுகாப்பு, முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைக்கவேண்டும். நமது கூட்டு முயற்சி தொடர்பாக கருத்து பரிமாற்றம் செய்யவேண்டும்.

அக்கம்பக்கத்தினரோடு இணைந்து செயல்பட வேண்டும். சில வீடுகளில் குடும்ப வன்முறை நடக்கிறது. இதில் பாதிக்கப்படுவர்களுக்கு உதவிட வேண்டும். அவர்களுக்கான சட்ட பாதுகாப்பு குறித்து தெரிவிக்கவேண்டும். தங்கள் திறனை மேம்படுத்தி வருமானத்தை ஈட்ட முயற்சி மேற்கொள்ள வேண்டும். இனிமேல் புதுவையில் பெண்களால் முன்னேற்றம் ஏற்படும்.

திறன் மேம்பாட்டுக்கு நிறைய வசதிகள் உள்ளன. பெண் குழந்தைகளை படிக்க வைக்கவேண்டும். அதன்பின் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வருமானம் ஈட்ட செய்யலாம். பெண்கள்தான் மாற்றத்துக்கு காரணமாக இருக்கவேண்டும்.

குறிப்பாக குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித்தனியாக பிரித்து வைக்க வலியுறுத்த வேண்டும். அதேபோல் குப்பைகளை சாக்கடை வாய்க்காலில் வீசவும் கூடாது. தண்ணீரை சேமிக்கும் பழக்கத்தையும் பெண்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கவர்னர் கிரண்பெடி பேசினார்.

விழாவில் அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், தீப்பாய்ந்தான், கீதா ஆனந்தன், விஜயவேணி, தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், குழந்தைகள் நலம் மற்றும் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவி தேவிப்ரியா, மனநல டாக்டர் ஷாலினி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் யஷ்வந்தையா நன்றி கூறினார்.

புதுவை கவர்னர் மாளிகையில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கவர்னர் கிரண்பெடி தலைமை தாங்கினார். இதில் புதுவை சுவஜ்தா கார்பரேஷன் பெண் துப்புரவு தொழிலாளர்கள் 800 பேர் பங்கேற்றனர்.

Next Story