அகதிகள் முகாமில் இருந்து தப்பிய இளம்பெண் டெல்லியில் நடந்த விபத்தில் பலி


அகதிகள் முகாமில் இருந்து தப்பிய இளம்பெண் டெல்லியில் நடந்த விபத்தில் பலி
x
தினத்தந்தி 17 March 2018 12:15 AM GMT (Updated: 16 March 2018 10:49 PM GMT)

கன்னியாகுமரி அருகே உள்ள அகதிகள் முகாமில் இருந்து தப்பி சென்ற இளம்பெண் டெல்லியில் நடந்த விபத்தில் பலியானார். ஆஸ்திரேலியாவில் இருக்கும் காதலனை பார்க்க முயன்றவருக்கு இந்த பரிதாபம் நேர்ந்துள்ளது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பெருமாள்புரத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் ரம்யா (வயது 24) என்ற இளம்பெண் குடும்பத்துடன் தங்கி இருந்தார். இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.

கடந்த ஜனவரி மாதம் வேலைக்கு சென்ற ரம்யா பின்னர் முகாமுக்கு திரும்ப வரவில்லை. பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் மாயமான ரம்யாவை தேடி வந்தனர்.

இந்தநிலையில், சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த ஒரு சாலை விபத்தில் ரம்யா பலியானது தெரிய வந்தது. அங்கு ஸ்ரீமதி ஹமீரா என்ற பெயரில் பயணம் செய்த போது, விபத்தில் சிக்கி ரம்யா பலியாகியுள்ளார்.

இதையடுத்து அவரது உடல் டெல்லியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் கொட்டாரம் பெருமாள்புரம் அகதிகள் முகாமுக்கு உடல் கொண்டு வரப்பட்டது. ரம்யாவின் உடலை கன்னியாகுமரி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே ரம்யா டெல்லிக்கு எதற்காக சென்றார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.

ரம்யாவின் காதலன் இலங்கையில் இருந்து கள்ளத் தோணி மூலம் ஆஸ்திரேலியா சென்றுவிட்டார். அவரை சந்திக்க ரம்யா முடிவு செய்தார். இதற்காக அகதிகள் முகாமில் இருந்து வெளியேறி சென்னை சென்றார். அங்கு ஒரு ஏஜெண்டு மூலம் தனது பெயரை ஸ்ரீமதி ஹமீரா என மாற்றி போலியாக பாஸ்போர்ட்டு எடுக்க முயற்சித்துள்ளார். பின்னர், டெல்லி சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்லவும் தயாராகி இருக்கிறார். இந்த நிலையில், டெல்லியில் காரில் சென்று கொண்டிருந்த போதுதான் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அகதிகள் முகாமில் இருந்து மாயமான பெண், வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற போது விபத்தில் சிக்கி பலியான சம்பவம் கொட்டாரம் அகதிகள் முகாமில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story