செங்கல்லுக்கு மாற்றாக ஒரு கண்டுபிடிப்பு


செங்கல்லுக்கு மாற்றாக ஒரு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 18 March 2018 10:15 AM IST (Updated: 18 March 2018 11:13 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமானத் துறையில் பல்வேறு விதமான மாற்றுப் பொருட்கள் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன. இவ்வகையான மாற்றுக் கட்டுமான பொருட்கள் மூலம் நம் பூமி மாசுபடுவது குறைக்கப்படுகிறது.

 பல்வேறு வழிகளில் நம் சுற்றுச்சூழல் மாசுபட்டுவரும் இன்றைய சூழலில் இது அவசியமான ஒன்று. இந்த மாதிரியான மாற்றுப் பொருள்தான் செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட் பிளாக். இது செங்கலுக்கு மாற்றுப் பொருள்.

செங்கல் தயாரிப்புக்காக நாள்தோறும் மரங்கள் வெட்டப் படுகின்றன. பூமியிலிருந்து மண் எடுக்கப்படுகிறது. இதனால் பூமியில் உண்டாகும் வெப்பம் மிக அதிகமாகும். இதைத் தடுக்கும் பொருட்டே இந்த மாற்று கட்டுமானப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பில் பயன்படும் பிரதான எந்திரங்கள் மிக்சரும் கிரைண்டரும் தான். போம் ஜெனரேட்டர் பிளை ஆஷ், சிமென்ட், போமிங் ஏஜென்ட் ஆகியவை இந்தக் கற்கள் தயாரிப்பில் முக்கியமான பகுதிப் பொருட்கள்.

இதில் சிமென்ட் போமிங் ஏஜென்ட் தாவர எண்ணெய்யில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். போமிங் ஜெனரேட்டரில் உருவாக்கப்பட்ட போமிங் உடன் பிளை ஆஷ், சிமென்ட் ஆகியவற்றை மிக்சர் கிரைண்டரில் நன்றாக அரைக்க வேண்டும். சில மணி நேரங்களுக்குப் பிறகு கடினமான கலவை உருவாகும். இப்படி உருவாகும் கலவையை அச்சுகளில் ஊற்றி உலரவிட வேண்டும். போதுமான நேரம் உலர்ந்த பிறகு கற்களை அச்சுகளிலிருந்து பிரிக்க வேண்டும். பெரிய கட்டிடப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட் பிளாக் உற்பத்தி எந்திரங்களைத் தனியாக வாங்கித் தயாரிக்கின்றன. இவை இல்லாமல் சிறு சிறு கட்டிடப் பணிகளுக்காக இவ்வகைக் கற்களை தயாரிப்பவர்களும் இருக்கிறார்கள்.

இம்முறையில் தயாரிக்கப்படும் கற்கள் அதிக எடை தாங்கும் திறன் கொண்டவை. அதுபோல வெப்பத்தைக் கடத்தும் திறனும் மிகக் குறைவு. அதனால் வீட்டுக்கு கோடை காலத்திலும் குளுமையைத் தரும். தீயைக் கடத்தும் பண்பும் மற்ற மாற்றுக் கட்டுமான கற்களுடன் ஒப்பிடும்போது குறைவு. இன்னொரு முக்கியமான பயன் இது அளவில் பெரியது. ஆனால், உறுதியானது. எடையும் குறைவு. மேலும், இந்த கற்களைக் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தும்போது கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க முடியும். கட்டுமானத்தின் மொத்தச் செலவுகளில் 20 சதவீதம் வரை மிச்சமாகும். அது மட்டுமல்லாது இந்த மாற்றுக் கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் வாழும் பூமியின் ஆரோக்கியத்தைக் காக்கலாம்.

Next Story