இந்த ஓட்டலில் பணமில்லாமல் சாப்பிடலாம்!


இந்த ஓட்டலில் பணமில்லாமல் சாப்பிடலாம்!
x
தினத்தந்தி 24 March 2018 12:15 AM GMT (Updated: 22 March 2018 10:00 AM GMT)

பணமில்லாமல் சாப்பிடக்கூடிய ஓட்டலா? அது எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா? ஜப்பானில்தான் அந்த ஓட்டல் செயல்படுகிறது. ஆனால் ஏழைகள் மட்டுமே அங்கு பணமில்லாமல் சாப்பிட முடியும்.

ப்பான் தலைநகர் டோக்கியோ வில், ஜின்போசா பகுதியில் ‘மிரவ் சோகுடோ’ என்ற அந்த ஓட்டல் செயல்பட்டு வருகிறது. அங்குதான் ஏழை மக்கள் பணமின்றிச் சாப்பிட அனுமதிக்கிறார்கள்.

ஏழைகள், பணம் கொடுக்காமல் சாப்பிடுகிறோமே என்று கூச்சப்படத் தேவையில்லை. அவர்கள் சுமார் 50 நிமிடங்கள் மேஜைகளை சுத்தம் செய்வது போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும். ஆக, ‘விலையில்லா’ உணவு இல்லை.

இந்தப் புதுமை ஓட்டலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக் கிறது. சிகாய் கோபயாஷி என் பவர் கடந்த 2016-ம் ஆண்டு இதைத் தொடங்கியிருக் கிறார்.

இந்த ஓட்டலின் முதலாளி மட்டுமல்ல, இதன் ஒரே நிரந்தரத் தொழிலாளியும் கோபயாஷிதான். ஓட்டலுக்கு சாப்பிட வருவோர்தான் இங்கு வேலைகளைக் கவனித்துக்கொள்கின்றனர்.

‘மிரவ் சோகுடோ’ ஓட்டலில் ஒரு ஷிப்டில், அதாவது 4 மணி நேரத்துக்கு மட்டும் 500 பேர் பணியாற்றுகின்றனர். எனவே ஓட்டல் களைகட்டியிருக்கிறது.

ஓட்டல் நிறுவனர் கோபயாஷி கூறுகையில், ‘ஒருநாள் நான் எனது நண்பர்களுக்கு சமைத்துக் கொடுத்தேன். அது அவர் களுக்கு மிகவும் பிடித்திருந்தது. நண்பர்கள் தெரிவித்த பாராட்டுதான் என்னை சொந்தமாக ஓட்டல் தொடங்க வைத்தது. ஆனால் இந்த ‘மிரவ் சோகுடோ’ ஓட்டலை திறப்பதற்கு முன்பாக, ஒரு பெரிய ஓட்டலில் முறைப்படி பயிற்சி எடுத்துக்கொண்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

துணிச்சலாக ஓட்டலை திறந்தது மட்டுமல்லாமல், அதில் புதுமையான திட்டத்தையும் அறிவித்து பட்டையைக் கிளப்புகிறார், கோபயாஷி.

Next Story