பள்ளி மாணவனுடன் ஓரினச்சேர்க்கை: இங்கிலாந்து பாதிரியாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வள்ளியூர் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு


பள்ளி மாணவனுடன் ஓரினச்சேர்க்கை: இங்கிலாந்து பாதிரியாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வள்ளியூர் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 13 April 2018 9:00 PM GMT (Updated: 13 April 2018 6:34 PM GMT)

பள்ளிக்கூட மாணவனுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட வழக்கில் இங்கிலாந்து பாதிரியாருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து வள்ளியூர் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.

வள்ளியூர், 

பள்ளிக்கூட மாணவனுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட வழக்கில் இங்கிலாந்து பாதிரியாருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து வள்ளியூர் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.

இங்கிலாந்து பாதிரியார் 

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஜோனதன் ராபின்சன்(வயது75). பாதிரியார். இவர், கடந்த 95–ம் ஆண்டு நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகில் உள்ள சின்னம்மாள்புரத்துக்கு வந்தார். அங்கு ‘கிரேயல் டிரஸ்ட்’ என்ற அமைப்பு மூலம் ஏழை, எளிய அனாதை மாணவ, மாணவிகளுக்கான விடுதி ஒன்றை உருவாக்கினார்.

சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 22 பள்ளிக்கூட சிறுவர், சிறுமிகள் அந்த விடுதியில் தங்கினர். இவர்கள், அந்த விடுதியில் இருந்து அருகில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில், அந்த காப்பகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக இங்கிலாந்து நாட்டில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு கண்காணிப்பு குழுவுக்கு புகார்கள் சென்றன. இதுகுறித்து விசாரிக்க அந்த குழு, பெங்களூருவில் உள்ள ஜஸ்டிஸ் அண்டு கேர் என்ற நிறுவனத்தின் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

சிறுவனுடன் ஓரினச்சேர்க்கை 

இதைத்தொடர்ந்து பெங்களூரு நிறுவனத்தினர், சின்னம்மாள்புரத்திலுள்ள அந்த காப்பகத்தை கண்காணித்து வந்தனர். அப்போது, காப்பக்கத்தில் தங்கி இருந்த பள்ளிக்கூட சிறுவர், சிறுமிகளுக்கு பாதிரியார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த நிலையில் கடந்த 2011–ம் ஆண்டில் ஓரினச்சேர்க்கையில் பாதிக்கப்பட்டதாக அந்த காப்பகத்தில் தங்கி இருந்த 16 வயது பள்ளிக்கூட சிறுவன் கொடுத்த தகவலின் அடிப்படையில், பெங்களூரு நிறுவனத்தின் பிரதிநிதி சிகுரான் வள்ளியூர் போலீசாரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் மனு கொடுத்தார். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் குழந்தைகள் நல அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில் கடந்த 2011–ம் ஆண்டு செப்டம்பர் 7–ந் தேதி அந்த காப்பகத்தை மூட நெல்லை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

தப்பி ஓட்டம் 

இதற்கிடையில், தன் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் மீது வள்ளியூர் போலீசார் நடவடிக்கை எடுக்க தடை கோரி ஜோனதன் ராபின்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், அவர் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்க சர்வதேச போலீசார் மூலம் வள்ளியூர் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். அவருக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

இதை ரத்து செய்யக்கோரி மீண்டும் ஜோனதன் ராபின்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி,‘ வள்ளியூர் கோர்ட்டில் ஆஜராகி வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்’ என அவருக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை வள்ளியூர் கோர்ட்டில் நடந்து வந்தது.

3 ஆண்டு சிறை 

வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் நேற்று தீர்ப்பு வழங்கினார். அவர் வழங்கிய தீர்ப்பில், ‘குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜோனதன் ராபின்சனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் வனிதா ஆஜராகி வாதிட்டார்.

 ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட குற்றத்துக்காக வெளிநாட்டை சேர்ந்தவருக்கு சிறை தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

பின்னர், ஜோனதன் ராபின்சன் 2 நபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Next Story