காங்கேயம் அருகே 12-ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிலை கண்டெடுப்பு


காங்கேயம் அருகே 12-ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிலை கண்டெடுப்பு
x
தினத்தந்தி 15 April 2018 10:30 PM GMT (Updated: 2018-04-16T00:39:27+05:30)

காங்கேயம் அருகே 12-ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்,

தமிழர் நாகரீகமும், தெய்வ வழிபாடும் மிகவும் தொன்மையானது. பண்டைய தமிழ் மக்களின் மரபுகள், பழக்க வழக்கங்கள் பல்வேறு அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்து உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டு வரும் சிலைகள் மூலம் பழந்தமிழர்கள் குறித்து ஏராளமான தகவல்கள் காணக்கிடைக்கிறது. திருப்பூரில் இயங்கி வரும் வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த வெ.சுப்பிரமணி, ந.சுந்தர் மற்றும் என்ஜினீயர் ரவிக்குமார் ஆகியோர் காங்கேயம் அருகே கீரனூர் கிராமத்தில் கொற்றவை (துர்க்கை) சிலையை கண்டெடுத்துள்ளனர்.

இந்த சிலை குறித்து ரவிக்குமார் கூறியதாவது:-

இந்த கொற்றவை சிலை 12-ம் நூற்றாண்டை சேர்ந்தது. உலகில் முதன் முதலில் தொடங்கியது தாய் தெய்வ வழிபாடு ஆகும். எகிப்து, சிரியா மற்றும் இந்தியாவில் நடந்த அகழ்வாராய்ச்சியில் தாய்தெய்வ வழிபாடு குறித்து தெரியவந்துள்ளது. பழையோள், தலையோள், முதியோள், கொற்றவை, காளி, துர்க்கை என தமிழர் பெண் தெய்வ வழிபாடு குறித்து பண்டைய இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

அந்த வகையில் கொங்கு மண்டலத்தில் பழமையான துர்க்கை அம்மன்களில் ஒன்றாக கீரனூர் கிராமத்தில் கொற்றவை (துர்க்கையம்மன்) துக்காச்சியம்மன் விளங்குகிறது. துக்காச்சி காடு (மலை கிழுவ மரம்) சூழ்ந்த பகுதியில் சிறு இட்டேரி வழியாக உள்ள பகுதியில் இந்த அம்மன் சிலை அமைந்துள்ளது. மெக்கன்சி குறிப்பொன்று துர்க்கை ஆட்சி, துக்காச்சியென மாறியது என்று குறிக்கிறது. மானுக்கு முன் நின்ற கோலத்தில் இருக்கும் இந்த அம்மன் சிலை 105 செ.மீட்டர் உயரமும், 55 செ.மீட்டர் அகலமும் உடையது ஆகும்.

மிகவும் அழகிய கோலத்துடன் வடக்கு நோக்கி இருக்கும் அம்மன், தலையில் கிரீட மகுடமும், காதில் காதணி, கழுத்து, கைகளில் அணிகலன்களுடன் மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இடையில் கொசுவம், வைத்த ஆடை காணப்படுகிறது.

துக்காச்சியம்மனின் பின் இடது கையில் சங்கு, வலது கையில் சக்கரம், முன் இடது கையை தொடைக்கு மேல் வைத்தும், வலது கையில் அபய ஹஸ்த்த முத்திரையுடன் “யாம் இருக்க எதற்கும் அஞ்சற்க“ என்று தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இந்த சிலை. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story