ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி மூதாட்டி தீக்குளிக்க முயற்சி


ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 17 April 2018 4:00 AM IST (Updated: 17 April 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்,

பரமக்குடி அருகே உள்ளது பெருமாள் கோவில் கிராமம். இந்த ஊரைச்சேர்ந்த முத்துச்சாமி என்பவரின் மனைவி பாண்டியம்மாள்(வயது 70). இவர் நேற்று காலை தனது மகள் முருகேஸ்வரியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி மூதாட்டி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட தீயணைப்புத்துறை ஊழியர் உடனடியாக அவரின் உடலில் தண்ணீர் ஊற்றினார்.

அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பாதுகாப்பாக அவரை மீட்டு அழைத்து சென்றனர். இதுகுறித்து பாண்டியம்மாள் கூறியதாவது:- எனக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருபவர் வீட்டை காலி செய்யாமல் வீட்டினை அபகரிக்க முயன்று வருகிறார்.

வீட்டை காலி செய்யும்படி கூறினால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். 5 பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். ஒரே ஒரு மகன் உள்ளான். உடல் ஊனமுற்ற நிலையில் உள்ளதால் எங்களிடம் உள்ள வீட்டை அபகரிக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.

இதுகுறித்து கலெக்டர், போலீசார் உள்ளிட்டோருக்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாரிக்க வரும் அதிகாரிகளையும் அரிவாளால் வெட்ட வருகிறார். இதனால் எனக்கு நியாயம் கிடைக்க வழி இல்லாமல் போய்விட்டது.

எனது சொத்தினை காப்பாற்ற வழியில்லாததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய் தேன். இவ்வாறு கூறினார்.

இதனை தொடர்ந்து போலீசார் அழைத்து சென்று விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story