குடிநீர் பஞ்சத்தை போக்க கருணாஸ் எம்.எல்.ஏ. புதிய முயற்சி: கொரிய விஞ்ஞானி குழுவினர் மூலம் தண்ணீர் எடுக்கும் திட்டம்


குடிநீர் பஞ்சத்தை போக்க கருணாஸ் எம்.எல்.ஏ. புதிய முயற்சி: கொரிய விஞ்ஞானி குழுவினர் மூலம் தண்ணீர் எடுக்கும் திட்டம்
x
தினத்தந்தி 23 April 2018 10:00 PM GMT (Updated: 23 April 2018 8:38 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பஞ்சத்தை போக்க கருணாஸ் எம்.எல்.ஏ. கொரியா நாட்டு விஞ்ஞானி குழுவினருடன் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கொரிய நாட்டு விஞ்ஞானி மூன் கோலி என்பவர் தலைமையிலான குழுவினருடன் கலெக்டரை சந்தித்து திருவாடானை தொகுதியில் நீர் மேலாண்மை குறித்து புதிய திட்டத்தினை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தி அறிக்கை அளித்தார்.

இதன்பின்னர் கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டாண்டு காலமாக மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது. இதன்காரணமாக இந்த மாவட்டத்தில் நீர் ஆதாரம் இல்லாமல் மக்கள் குடிநீருக்காக அவதியடைந்து வருகின்றனர். குடிநீர் பஞ்சத்தை போக்கும் வகையில் கொரிய நாட்டு நிறுவன விஞ்ஞானியின் உதவியுடன் நீர் ஆதாரங்களை கண்டறிந்து மக்களுக்கு பயன்படும் வகையில் வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இயற்கையிலேயே இந்த மாவட்டத்தில் அதிக ஆழத்தில் சுத்தமான நல்ல தண்ணீர் இருக்கிறது.

அதனை சரியான முறையில் கண்டறிந்து வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் முதல் 15 லட்சம் லிட்டர் வரை நல்ல தண்ணீர் எடுத்து வினியோகிக்க முடியும். முதல்கட்டமாக இந்த திட்டத்தினை திருவாடானை சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

முதல்-அமைச்சர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சரின் அனுமதி பெற்று கலெக்டரிடம் ஆலோசனை நடத்தி உள்ளேன். விரைவில் இந்த திட்டத்தினை நிறைவேற்றி எனது தொகுதி மக்களுக்கு தண்ணீர் வழங்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த திட்டம் குறித்து கொரிய நாட்டு விஞ்ஞானி மூன் கோலி மற்றும் இயக்குனர் அஜித்சர்மா, இந்தியாவிற்கான நிறுவன பொறுப்பாளர் அருண் மேனன் ஆகியோர் கூறியதாவது:- இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் உண்மையில் பூமிக்கடியில் 2,000 மீட்டர் ஆழத்தில் அருமையான மினரல் தண்ணீர் போன்று நல்ல நீர் உள்ளது. இந்த நீர் ஆதாரங்களை செயற்கைகோள் உதவியுடன் கண்டறிந்து ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீரை வெளியே எடுத்து வினியோகிக்கலாம்.

கொரிய நாட்டில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் புனே பகுதியில் இதுபோன்று நீர்ஆதாரத்தினை கண்டறிந்து ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் வெளியே எடுத்து வெற்றிகண்டுள்ளோம். இதுதவிர மகாராஷ்டிரா மாநிலத்தில் இதற்கான அனுமதி பெற்றுள்ளோம். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் செயற்கைகோள் உதவியுடன் நீர் ஆதாரங்களை கண்டறிந்து தண்ணீர் எடுக்க முடியும். இதற்காக 250 கிலோ எடை கொண்ட ஸ்கேனர் கருவி புனேயில் இருந்து வந்து கொண்டிருக்கிறது.

இந்த கருவி மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பூமிக்கடியில் எந்த பகுதியில் குறைந்தது 10 ஆண்டுகள் நீர் வழங்கும் வகையில் நீர் ஆதாரம் உள்ளது என்பதை கண்டறிந்து அந்த பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்படும். ஒரு ஆழ்குழாய் கிணறு அமைக்க ரூ.60 முதல் 70 லட்சம் செலவாகும். எங்கள் நிறுவனத்தின் சிறப்பம்சம் ஆழ்குழாய் கிணறு அமைக்கும்போதும், தண்ணீர் எடுக்கும் போதும் மேற்பரப்பில் இந்த பகுதியில் அதிகமாக காணப்படும் உப்புநீர் உட்புகாதவாறு திட்டம் வடிவமைக்கப்படும். சுத்திகரிக்க தேவையில்லாத வகையில் தூய்மையான தண்ணீர் பூமிக்கடியில் அதிக ஆழத்தில் உள்ளது. இதனை வெளிக்கொண்டு வந்து மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்ப்பதுதான் எங்களின் நோக்கம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story