சி.எம்.டி.ஏ. எல்லை விரிவாக்கத்துக்கு சென்னையில் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு
சி.எம்.டி.ஏ. எல்லை விரிவாக்கத்துக்கு சென்னையில் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சென்னை,
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) திட்ட அனுமதி பிரிவின் ஒப்புதலுடன் தான் நகரில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும். மேலும் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கட்டுவதற்கு அனுமதியையும் வழங்கி வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்ததையடுத்து, சி.எம். டி.ஏ. எல்லையை விரிவாக்க வேண்டும் என்று கடந்த 2011-ம் ஆண்டு தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து சி.எம். டி.ஏ.வின் திட்ட அனுமதி பிரிவு எல்லை விரிவாக்கப்படும் என்று தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சராக இருந்த உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சட்டசபையில் அறிவித்தார்.
விரிவுபடுத்தப்படும்
அப்போது அவர் பேசும்போது, ‘சென்னையை சுற்றி அதிவேகமாக நகர்மயமாகி வரும் பகுதிகளில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை ஒழுங்குபடுத்தவும், அப்பகுதிகளில் பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார செயல்பாடுகளுக்கு தேவையான வசதிகளை உண்டாக்குவதற்கும் சி.எம்.டி.ஏ. எல்லையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம், நெமிலி தாலுக்காவை உள்ளடக்கி 8 ஆயிரத்து 878 சதுர கிலோ மீட்டர் விரிவுபடுத்தப்படும்.’ என்று தெரிவித்தார்.
கருத்துக்கேட்பு கூட்டம்
பெருநகர சென்னை மாநகராட்சி, 16 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் என 1,189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு எல்லையில் இயங்கி வரும் சி.எம்.டி.ஏ. தனது எல்லையை 8 ஆயிரத்து 878 சதுர கிலோ மீட்டர் என 8 மடங்காக உயர்த்துவது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது.
சி.எம்.டி.ஏ. விரிவாக்கத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, அது நிலுவையில் இருந்து வருகிறது. இந்தநிலையில் சி.எம்.டி.ஏ. விரிவாக்கம் குறித்து உள்ளாட்சி அமைப்புகள், பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 13-ந்தேதியும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 20-ந்தேதியும் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டது.
சென்னையில்
சென்னையில் 23-ந்தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் என்று சி.எம்.டி.ஏ. அறிவித்திருந்தது. அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் உள்ள அம்மா மாளிகையில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இதில், வீட்டு வசதி மற்றும் நகர மேம்பாட்டுத்துறையின் முதன்மை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளர் ராஜேஷ் லக்கானி, நகரம் மற்றும் ஊரக திட்ட கமிஷனர் பீலா ராஜேஷ் ஆகியோர் சி.எம்.டி.ஏ.யின் எல்லை விரிவாக்கம் குறித்து பேசினர்.
மேலும் எல்லை விரிவாக்கம் தொடர்பான தகவல்கள் அகன்ற திரையில் ஒளிபரப்பப்பட்டன. கருத்துக் கேட்பு கூட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், பசுமை தாயகம், பூவுலகு நண்பர்கள், அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், கட்டுமான சங்கத்தை சேர்ந்தவர்கள், நில அளவையர் சங்கங்களை சேர்ந்தவர்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.
கடுமையான எதிர்ப்பு
ஒவ்வொருவராக தங்களுடைய கருத்துகள், ஆட்சேபணைகள், ஆலோசனைகளை பதிவு செய்தனர். அதில் பெரும்பாலானோர் சி.எம். டி.ஏ. எல்லை விரிவாக்கத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் என்றும் வலியுறுத்தினர். நீர் நிலைகளை முறையாக பாதுகாக்கவேண்டும். ஏரி, கால்வாய், ஆறுகளில் கழிவுநீர் கலந்து மாசு ஏற்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
விரிவாக்கம் என்ற பெயரில் விவசாய நிலங்களை அழிக்கவேண்டாம். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவில்லை. தற்போது சி.எம்.டி.ஏ. கட்டுப்பாட்டில் உள்ள எல்லைகளில் கட்டமைப்புகள் சரிவர மேம்படுத்தப்படவில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும் கருத்துக்கேட்பு கூட்டம் தொடர்பாக அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் முறையாக அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
வீட்டு வசதி மற்றும் நகர மேம்பாட்டுத்துறையின் முதன்மை செயலாளர் எஸ். கிருஷ்ணன் பேசியதாவது:-
நல்ல முறையில் பயன்படுத்த
சி.எம்.டி.ஏ. எல்லை விரிவாக்கத்தின்போது ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகள், விவசாய நிலங்கள், காடுகள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து அவற்றை உரிய பயன்பாட்டுக்கு ஒதுக்கிவிட்டு, மீதம் உள்ள இடங்கள் வீட்டு வசதி மற்றும் தொழில்துறைக்கு ஒதுக்கப்படும். நிலத்தின் பயன்பாட்டை நல்ல முறையில் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். சி.எம்.டி.ஏ. எல்லையை விரிவாக்கத்தை திறம்பட செயல்படுத்துவதற்கு தொழில்நுட்ப நிபுணர் கள், திறமையான பணியாளர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். திட்டத்தை செயல்படுத்த நிதி பற்றாக்குறையும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
பீலா ராஜேஷ்
நகரம் மற்றும் ஊரக திட்ட கமிஷனர் பீலா ராஜேஷ் பேசும்போது, “பொதுமக்கள் தெரிவித்த ஆட்சேபனைகள், குறைகளை நிவர்த்தி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். எதிர்காலத்தில் நீங்கள் தெரிவித்த குறைகள் போன்று எதுவும் நடக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
முன்னதாக சி.எம்.டி.ஏ. தலைமை திட்டமிடல் அதிகாரி பி.செல்வதுரை எல்லை விரிவாக்கம் குறித்து விளக்கும்போது, கும்மிடிப்பூண்டி, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மண்டலங்களாக பிரித்து எல்லை விரிவாகத்தை செயல்படுத்த உத்தேசமாக திட்டமிடப்பட்டதாக தெரிவித்தார்.
கூட்டத்தில் சி.எம்.டி.ஏ. தலைமை செயல் அதிகாரி எம்.மதிவாணன், பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் கோவிந்த ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story