சாலையோரம் நிறுத்தப்படும் தண்ணீர் லாரிகள்: குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி


சாலையோரம் நிறுத்தப்படும் தண்ணீர் லாரிகள்: குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 24 April 2018 11:45 PM GMT (Updated: 24 April 2018 7:26 PM GMT)

சாலையோரம் நிறுத்தப்படும் தண்ணீர் லாரிகள் மற்றும் குண்டும் குழியுமான சாலையால் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

பெரம்பூர்,

சென்னை மூலக்கடையில் இருந்து டவுட்டன், புரசைவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பெரும்பாலான வாகன ஓட்டிகள், வியாசர்பாடி அம்பேத்கர் கலை கல்லூரி சாலை வழியாகச் சென்று வருகின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த சாலையில் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

இந்த சாலையில் அம்பேத்கர் கலை கல்லூரி அருகே மாநகராட்சி குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான நீரேற்று நிலையம், மாநகராட்சி பள்ளி, புகழ்பெற்ற ரவீஸ்வரர் கோவில் உள்ளது. ஆந்திராவில் இருந்து லாரிகள் மூலம் புளியந்தோப்பு ஆட்டுதொட்டிக்கு இந்த வழியாகத்தான் ஆடுகளை ஏற்றி வருவார்கள்.

வாகன ஓட்டிகள் அவதி

இந்த சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடியே செல்கின்றன. மேலும் குடிநீர் நீரேற்று வாரியத்தில் தண்ணீர் பிடிக்க வரும் லாரிகளையும் அதன் டிரைவர்கள் சாலையோரம் நிறுத்தி விடுகிறார்கள். அம்பேத்கர் கல்லூரி வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன.

விசேஷ நாட்களில் ரவீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களும் தங்கள் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

சீரமைக்க கோரிக்கை

குடிநீர் நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீர் நிரப்பி செல்லும் லாரிகள், சாலையில் உள்ள பள்ளத்தில் ஏறி இறங்கும்போது அதில் உள்ள தண்ணீர் சாலையில் சிந்தியவாறு செல்கின்றன. இதனால் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, சகதியாக காணப்படுகிறது. இதனால் அந்த பள்ளமானது மேலும் பெரிதாகி விடுகிறது.

மாதவரம், மூலக்கடை, சர்மாநகர், பி.வி.காலனியில் இருந்து இந்த சாலை வழியாக வரும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் குண்டும் குழியுமான சாலையாலும், போக்குவரத்து நெரிசலில் சிக்கியும் அவசரத்துக்கு வேகமாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே சாலையோரம் தண்ணீர் லாரிகள் நிறுத்துவதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். குண்டும் குழியுமான இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story