மைசூருவில் எடியூரப்பா தங்கியிருந்த ஓட்டல் முன்பு பா.ஜனதா தொண்டர்கள் 2-வது நாளாக போராட்டம்
மைசூருவில் எடியூரப்பா தங்கியிருந்த ஓட்டல் முன்பு பா.ஜனதா தொண்டர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மைசூரு,
மைசூருவில் எடியூரப்பா தங்கியிருந்த ஓட்டல் முன்பு பா.ஜனதா தொண்டர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜனதா அலுவலகம் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டிக்கெட் மறுப்பு
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் சித்தராமையா கடந்த முறை வெற்றி பெற்ற வருணா தொகுதியை தனது மகன் யதீந்திராவுக்காக விட்டுக் கொடுத்தார். அந்த தொகுதியில் அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியானது. இதனால், அவர் கடந்த ஒரு மாதமாக வருணா தொகுதியில் தீவிர பிரசாரம் செய்து வந்தார். இந்த நிலையில், பா.ஜனதா மேலிடம் வருணா தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று ஆய்வு நடத்தியது. அதில் விஜயேந்திரா போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பது தெரியவந்தது.
இதனால் பா.ஜனதா மேலிடம், விஜயேந்திராவுக்கு டிக்கெட் வழங்க முடியாது என்று தெரிவித்துவிட்டது. இதனை எடியூரப்பா நேற்று முன்தினம் நஞ்சன்கூட்டில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார். இதனால் நேற்று முன்தினம் நஞ்சன்கூடு, மைசூருவில் பா.ஜனதா தொண்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். விஜயேந்திராவுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர். ஆனாலும், வருணா தொகுதியில் போட்டியிட விஜயேந்திராவுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் பா.ஜனதா தொண்டர்கள் இரவு முழுவதும் மைசூருவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2-வது நாளாக போராட்டம்
இந்த நிலையில், நேற்று காலை எடியூரப்பா தான் தங்கியிருந்த ஓட்டலில் சாம்ராஜ்நகர், மைசூரு மாவட்ட பா.ஜனதா பிரமுகர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வருணா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிட மாட்டார் என்று திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பா.ஜனதா தொண்டர்கள் நேற்று காலை மீண்டும் 2-வது நாளாக எடியூரப்பா தங்கியிருந்த ஓட்டல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவருடன் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் ஆகியோர் இருந்தனர். இதனால் பா.ஜனதா தொண்டர்களுடன் எடியூரப்பா, பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும், அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். போராட்டக்காரர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
அலுவலகம் மீது கல்வீச்சு
இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தொண்டர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து எடியூரப்பா ஓட்டலில் இருந்து புறப்பட்டு காரில் சென்றுவிட்டார். அதன்பின்னர் பா.ஜனதா தொண்டர்கள் பெங்களூரு-நீலகிரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போலீசார் அங்கும் பா.ஜனதா தொண்டர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
அதன்பின்னர் அங்கிருந்து அவர்கள் மைசூரு நஜர்பாத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் போராட்டக்காரர்கள் திடீரென்று பா.ஜனதா அலுவலகம் மீது கற்களை வீசி தாக்கினார்கள். இதில், அலுவலகத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இந்த சம்பவங்களால் நேற்றும் மைசூருவில் தொடர்ந்து பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.
Related Tags :
Next Story