திருக்கழுக்குன்றம் அருகே கிணற்றில் மூழ்கி 2 பேர் சாவு


திருக்கழுக்குன்றம் அருகே கிணற்றில் மூழ்கி 2 பேர் சாவு
x
தினத்தந்தி 29 April 2018 9:30 PM GMT (Updated: 2018-04-30T00:44:02+05:30)

சென்னை கந்தன் சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். திருக்கழுக்குன்றம் அருகே கிணற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்தனர்.

கல்பாக்கம்,

சென்னை பல்லவன் குடியிருப்பு கண்ணகி நகரை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் தருண்குமார் (வயது 17). இவர் சமீபத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு சென்னை கந்தன் சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

சென்னை தரமணி எம்.ஜி.ஆர் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் ரஞ்சித்குமார் (17), சென்னை பல்லவன் குடியிருப்பு கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் பார்த்திபன் (19), பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரது மகன் அருண்(17). இவர்கள் 4 பேரும் ஒரே வகுப்பில் படித்து வந்தனர்.

இவர்களில் பார்த்திபனின் சொந்த ஊர் திருக்கழுக்குன்றம் அடுத்துள்ள கொத்தி மங்கலம் கிராமம். நேற்று இவர்கள் 4 பேரும் கொத்தி மங்கலத்தில் நடந்த கோவிலில் பொங்கலிடும் நிகழ்ச்சிக்கு சென்றனர்.

மதியம் திருக்கழுக்குன்றம் பைபாஸ் சாலை, ஏரிகரையில் உள்ள கிணற்றில் அனைவரும் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தருண்குமாரும், ரஞ்சித்குமாரும் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி தத்தளித்தனர். அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் மற்றும் அருண் தண்ணீரில் மூழ்கிய நண்பர்களை மீட்க உதவி கேட்டு கூச்சல் எழுப்பினர்.

இந்த நிலையில் நீரில் மூழ்கியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கிணற்றில் மூழ்கி உயிரிழந்த 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story