மகாசக்தி மாரியம்மன் கோவில்களில் தேரோட்டம்


மகாசக்தி மாரியம்மன் கோவில்களில் தேரோட்டம்
x
தினத்தந்தி 29 April 2018 11:33 PM GMT (Updated: 29 April 2018 11:33 PM GMT)

வி.கைகாட்டி, வேப்பந்தட்டை மகாசக்தி மாரியம்மன் கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி-அரியலூர் சாலையில் மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் ஒவ்வொரு உபயதாரர்கள் பங்களிப்புடன் மகா சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து இரவு மகாசக்தி மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.

தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை மகாசக்தி மாரியம்மன், காளியம்மன், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகாசக்தி மாரியம்மன், காளியம்மன், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் காலை 11 மணிக்கு மகாசக்தி மாரியம்மன் உள்ளிட்ட சுவாமிகள் திருத்தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து நாதஸ்வர இசை, மேள தாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

முதல் தேரில் விநாயகரும், 2-வது தேரில் காளியம்மனும், 3-வது தேரில் மகாசக்தி மாரியம்மனும் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் படை சூழ தேர் அசைந்து ஆடி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் குவிந்து நின்று அம்மனுக்கு அர்ச்சனை செய்தனர். பின்னர் தேர் மாலை 6 மணிக்கு கோவில் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தில் தேளூர், மண்ணுழி, பெரியநாகலூர், சின்னநாகலூர், காட்டுபிரிங்கியம், ரெட்டிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து மகாசக்தி மாரியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், பின்னர் ஒவ்வொரு நாள் இரவும் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. இதனைதொடர்ந்து மகா சக்தி மாரியம்மன் கோவிலில் பொங்கல், மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக காலை மகாசக்தி மாரியம்மனுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகாசக்தி மாரியம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மகாசக்தி மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து நாதஸ்வர இசை, மேள தாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக இழுத்துவரப்பட்டு பின்னர் கோவில் நிலையை வந்தடைந்தது. அப்போது பொதுமக்கள், ஆன்மிக சான்றோர்கள் நீர்மோர் மற்றும் குளிர்பானங்களை பக்தர்களுக்கு வழங்கினர். இதில் கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story