ஓய்வுபெற்ற வங்கி ஊழியரின் நிலத்தை அபகரிக்க முயற்சி


ஓய்வுபெற்ற வங்கி ஊழியரின் நிலத்தை அபகரிக்க முயற்சி
x
தினத்தந்தி 5 May 2018 5:15 AM IST (Updated: 5 May 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

சேலையூர் அருகே ஓய்வுபெற்ற வங்கி ஊழியரின் பல லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இதுதொடர்பாக சட்ட பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவரை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம்,

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ரிசர்வ் வங்கி ஊழியர் குடியிருப்பை சேர்ந்தவர் பாலசுப்பு (வயது 66). சென்னை ரிசர்வ் வங்கி கிளையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவர் 1992-ம் ஆண்டு சேலையூரை அடுத்து உள்ள சந்தோஷபுரம் பகுதியில் மகராஜபுரம் மெயின் ரோட்டில் இடம் ஒன்றை வாங்கினார்.

பல லட்சம் மதிப்புள்ள 2475 சதுர அடி உள்ள அந்த இடத்தை சுற்றுச்சுவர் கட்டி அவ்வப்போது சென்று பார்வையிட்டு வந்தார். இந்த நிலையில், நேற்று காலை பாலசுப்பு தனது காலி மனையை பார்வையிட சென்றபோது, அங்கு கட்டப்பட்டிருந்த மதில் சுவரை இடித்து விட்டு புதிதாக மதில் சுவர் கட்டுமான பணிகள் நடந்துவருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அங்கு பணிகளை மேற்பார்வை செய்துகொண்டிருந்த வாலிபரிடம் விசாரித்தபோது மோகன்ராஜ் என்பவர் பாலசுப்பு என்பவருக்காக இந்த பணிகள் செய்துவருவதாக தெரிவித்தார். உடனே மோகன்ராஜை தொடர்புகொண்டு பேசச் சொல்லுங்கள் என்றபோது ஒரு மணி நேரமாகியும் அவர் அந்த வாலிபரை தொடர்புகொள்ளவில்லை.

தன்னுடைய நிலத்தை அபகரிக்க ஒரு கும்பல் முயற்சிப்பதை தெரிந்துகொண்ட பாலசுப்பு சேலையூர் போலீசில் புகார் செய்தார். சேலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மேற்பார்வை செய்து கொண்டிருந்த சென்னை ஜாபர்கான்பேட்டை, சேகர் நகர், மகாதேவன் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (31) என்பவரை கைது செய்து விசாரித்தனர்.

செந்தில்குமார் ஆந்திரா பல்கலைக்கழகம் ஒன்றில் எல்.எல்.பி. 3-ம் ஆண்டு படித்துவருவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். சென்னையை சேர்ந்த ஜெயசூர்யா, சரவணன், மோகன்ராஜ், ராஜூ ஆகியோர் அந்த நிலத்தை அபகரிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. செந்தில்குமாரை கைது செய்த போலீசார் இதில் தொடர்புடைய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

Next Story