கோட்ட பொறியாளரை கண்டித்து நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்


கோட்ட பொறியாளரை கண்டித்து நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 5 May 2018 4:00 AM IST (Updated: 5 May 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

கோட்ட பொறியாளரை கண்டித்து நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் நேற்று புதுக்கோட்டையில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்ட தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் ராஜாராமன், சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்கத்தின் மாநில தலைவர் அம்சராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் நாகராஜன், பொருளாளர் ரெங்கராசு உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினார்கள்.

ஒவ்வொரு மாதமும், மாதத்தின் கடைசி நாளில் சாலை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு, அலுவலக பணி மற்றும் உயர் அதிகாரிகளின் வீட்டில் பணி போன்ற மாற்றுப்பணிகளை வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் உட்கோட்டத்தில் பணிபுரியும் சாலை பணியாளர்களை பலி வாங்கும் நோக்கத்தில் விதிகளுக்கு புறம்பாக ஆவுடையார் கோவில் உட்கோட்டத்திற்கு பணி மாறுதல் வழங்கிய புதுக்கோட்டை கோட்ட பொறியாளரை கண்டித்தும், உடனடியாக வழங்கப்பட்ட பணி மாறுதல் ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சாலை பணியாளர்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சாலை பணியாளர்களுக்கு, போராட்டம் நடைபெற்ற இடத்திலேயே மதிய உணவு தயார் செய்யப்பட்டு, வழங்கப்பட்டது. சாலை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தையொட்டி திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story