புனே கிரிக்கெட் மைதான பராமரிப்புக்கு ஆற்று நீரை பயன்படுத்த தடை


புனே கிரிக்கெட் மைதான பராமரிப்புக்கு ஆற்று நீரை பயன்படுத்த தடை
x
தினத்தந்தி 5 May 2018 5:03 AM IST (Updated: 5 May 2018 5:03 AM IST)
t-max-icont-min-icon

புனே கிரிக்கெட் மைதான பராமரிப்பு பணிக்கு ஆற்று நீரை பயன்படுத்த தடைவிதித்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

மராட்டிய கிரிக்கெட் சங்கம் மாநில அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக புனே கிரிக்கெட் மைதானத்தின் பராமரிப்பு பணிகளுக்கு பாவனா ஆற்று நீரை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுகையில் மைதான பராமரிப்புக்கு அதிகளவு நீர் செலவிடப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தத்தில் மராட்டிய கிரிக்கெட் கழகத்துக்கு வழங்கும் நீரானது தொழிற்சாலை பயன்பாட்டு வகையில் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் மும்பையை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு மும்பை ஐகோர்ட்டில் மாநிலத்தில் வறட்சி தலைவிரித்து ஆடும்போது ஐ.பி.எல். போட்டிகளுக்காக அதிகளவு தண்ணீரை செலவழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுநல வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு மும்பை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஒகா மற்றும் ரியாஸ் சாக்லா அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மராட்டிய கிரிக்கெட் சங்கம் எந்தவித தொழிற்சாலையும் நடத்தப்படாதபோதிலும் தொழிற்சாலை பயன்பாட்டு வகையில் நீர் வழங்கப்படுவதாக கூறி கடந்த 6 ஆண்டுகளாக மாநில அரசு பாவனா ஆற்று நீரை பயன்படுத்த அனுமதி அளித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் அரசாங்கமே நாட்டில் பாயும் ஆறுகளின் அறங்காவலர் எனவும், நீர்வளத்தை சமமாக பகிர்ந்தளிப்பது அரசின் கடமை எனவும் கூறிய நீதிபதிகள் பாவனா ஆற்று நீரை பயன்படுத்த மராட்டிய கிரிக்கெட் சங்கத்துக்கு, மாநில அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

முன்னதாக இந்த வழக்கில் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதான பராமரிப்புக்கு கூடுதல் தண்ணீர் வழங்கப்படமாட்டாது என மும்பை மாநகராட்சி சார்பில் பிரமாண பத்திரம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story