மனைவியிடம் தகராறு செய்ததை தடுத்த தனியார் தங்கும் விடுதி ஊழியர் அடித்துக்கொலை


மனைவியிடம் தகராறு செய்ததை தடுத்த தனியார் தங்கும் விடுதி ஊழியர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 4 May 2018 11:36 PM GMT (Updated: 4 May 2018 11:36 PM GMT)

குமாரபாளையம் அருகே மனைவியிடம் தகராறு செய்ததை தடுத்த தனியார் தங்கும் விடுதி ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

குமாரபாளையம்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சடையம்பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் மகாலிங்கம் (வயது 30). இவர் பவானியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகாலிங்கத்தின் சொந்த ஊர் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கரட்டூர் ஆகும்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் கடத்தல் தொடர்பாக மகாலிங்கத்திற்கும், அதேபகுதியை சேர்ந்த அவருடைய உறவினர்கள் மாதேஸ்வரன், பழனிசாமி ஆகியோருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மாதேஸ்வரன், பழனிசாமி ஆகியோரின் குடும்பத்தை சேர்ந்த ராஜேஷ்வரி, அலமேலு, பூமணி, காயத்ரி ஆகியோர் ஜெயலட்சுமியிடம், தகராறு செய்தனர். இதனை மகாலிங்கம் தடுக்க முயன்றார். அப்போது மாதேஸ்வரன் கட்டையால் மகாலிங்கத்தை சரமாரியாக தாக்கினார்.

இதில் மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் குமாரபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், மகாலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார். மாதேஸ்வரன், பழனிசாமி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக சிலரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story