ஆக்கிக்காக திருமணத்தை தள்ளிப்போட்ட வீராங்கனை!
இந்திய பெண்கள் ஆக்கி அணியின் முக்கியத் தூணாகத் திகழும் தீபிகா தாக்கூர், ஆக்கிக்காக தனது திருமணத்தையே தள்ளிப்போட்டு வந்திருக்கிறார்.
தன்னைவிட தான் நேசிக்கும் ஆக்கியை மாப்பிள்ளை வீட்டார் ஏற்கவேண்டும் என்று தீபிகா போட்ட நிபந்தனைதான் அவரது திருமணத்தைத் தள்ளிப்போகச் செய்திருக்கிறது.
அரியானா மாநிலம் கர்னாலைச் சேர்ந்த தீபிகா, நடுத்தர குடும்பப் பின்னணியைச் சார்ந்தவர். இவரது தந்தை கடந்த 2013-ம் ஆண்டு காலமாகிவிட்ட நிலையில், மகளின் திரு மணத்தை விரைந்து நடத்த முயன்றிருக்கிறார், தீபிகாவின் தாய்.
ஆனால் வந்த வரன்கள் தரப்பில் விதிக்கப்பட்ட நிபந்தனை, தீபிகா ஆக்கி விளையாட்டை விட்டுவிட வேண்டும், திரு மணத்துக்குப் பிறகு சேலைதான் அணியவேண்டும் என்பதாகும்.
‘‘ஏன் என்னை அப்படியே ஏற்காமல், எனது உடை, எனக்குப் பிடித்தமான விளையாட்டு, எனது வேலை பற்றியெல்லாம் பேசினார்கள் எனப் புரியவில்லை’’ என்கிறார், இந்திய ரெயில்வே ஊழியரான தீபிகா.
கடைசியில், தீபிகாவின் எண்ணப்படி ஒரு வரன் அமைந் திருக்கிறது. அந்த மாப்பிள்ளை வீட்டார், பெண் தொடர்ந்து ஆக்கி விளையாடுவதில் தங்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்று கூறிவிட்டனராம்.
அதனால் திருமண பந்தத்தில் சந்தோஷத்தோடு இணைந்த தீபிகா, இப்போது தனக்குப் பெரிய ஊக்கமே தனது புகுந்த வீட்டினர்தான் என்கிறார்.
அவர்களின் ஆதரவுதான், அறுவைசிகிச்சை காரணமாக தீபிகா இந்திய அணியில் இருந்து விலகியிருக்க நேர்ந்த கஷ்டமான ஓராண்டு காலத்தைத் தாண்டிவர உதவியதாம்.
‘‘குறிப்பாக எனது கணவர், மீண்டும் உன்னால் ஆக்கி களத்துக்குத் திரும்ப முடியும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அவரும் எனது மாமனார் மாமியாரும் அளிக்கும் தெம்பு, என்னை துடிப்போடு ஆக்கி களத்தில் இறங்க வைத்திருக்கிறது’’ -ஆக்கி ராக்கெட் தீபிகா தெம்பாகச் சொல்லி முடிக்கிறார்.
Related Tags :
Next Story