பாரம்பரியம் மாறாமல் ஏர் பூட்டி நிலக்கடலை விதைக்கும் விவசாயிகள்
கூடலூர் பகுதிகளில் பாரம்பரியம் மாறாமல் ஏர்பூட்டி நிலக்கடலை விதைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கூடலூர்,
தேனி மாவட்டம், கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டிய கல்உடைச்சான்பாறை, பெருமாள்கோவில் புலம், கழுதைமேடு, பளியன்குடி ஆகிய பகுதிகளில் மானாவாரி நிலங்கள் ஏராளமாக உள்ளன. இந்த பகுதிகளில் கோடை மழையை நம்பி நிலக்கடலை, உளுந்து, பயறு, எள், மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கூடலூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி ஏற்கனவே விவசாயிகள் உழுது நிலத்தை தயார் நிலையில் வைத்திருந்தனர். கோடை மழை பெய்ததை தொடர்ந்து விவசாயிகள் நிலக்கடலை விதைப்பு பணியில் தீவிரம் காட்டியுள்ளனர்.
இதற்காக பாரம்பரியம் மாறாமல் விவசாயிகள், மாடுகள் பூட்டிய ஏர்களை ஓட்டி செல்ல பின்னால் பெண்கள் விதைக்கடலைகளை நிலத்தில் தூவி விதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக நிலக்கடலை விதைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சித்திரை மாதத்தில் விதைக்கப்படும் நிலக்கடலை, 120 நாட்களுக்கு பின் ஆடி முதல் வாரத்தில் விளைச்சல் அடைந்து விடும். அதன் பின்னர் அறுவடை செய்யப்படும். இதற்கு தேவையான விதைக்கடலைகளை திண்டுக்கல், கல்லுப்பட்டி, பேரையூர் பகுதிகளில் இருந்து விவசாயிகள் வாங்கி வந்து உள்ளனர். விதைப்பு பணியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஏர் ஒன்றுக்கு ரூ.1500-ம் பெண்களுக்கு ரூ.400-ம் விதைப்பு கூலி வழங்கப்படுகிறது.
Related Tags :
Next Story