ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறிப்பு கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்களின் உருவம் பதிவானது


ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறிப்பு கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்களின் உருவம் பதிவானது
x
தினத்தந்தி 6 May 2018 4:30 AM IST (Updated: 6 May 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

குழித்துறையில் ஆசிரியையிடம் 11¾ பவுன் தங்க சங்கிலியை பறித்து மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்மநபர்களின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

களியக்காவிளை,

அருமனை அருகே பனங்கரை பகுதியை சேர்ந்தவர் பென்னட். இவருடைய மனைவி லிஜிதா (வயது 30). இவர் குழித்துறையில் ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வகுப்பு முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக குழித்துறை சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் வேறொரு ஆசிரியையும் உடன் சென்றார்.

அப்போது, அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களில் பின்னால் இருந்த நபர், லிஜிதாவின் கழுத்தில் கிடந்த 11¾ பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த லிஜிதாவும், அவருடன் சென்றவரும் சத்தம் போட்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து லிஜிதா களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் ஒரு வணிக வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்களின் உருவம் மற்றும் சங்கிலி பறிக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சியை போலீசார் கைப்பற்றி மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். 

Next Story