கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடைகள் அடைப்பு


கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 5 May 2018 11:00 PM GMT (Updated: 5 May 2018 9:13 PM GMT)

கொள்ளிடம் ஆற்றில் மணல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருமானூரில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் புதிய மணல் குவாரி நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழு, அனைத்து விவசாயிகள் சங்கம், அனைத்து அரசியல் கட்சி யினர் நேற்று முன்தினம், சாலை மறியல், பொக்லைன் எந்திரம் முற்றுகை, கண்டன ஊர்வலம், சுடுகாட்டில் குடியேறுதல், ஒப்பாரி வைத்தல் உள்ளிட்ட பல போராட்டங் களில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் உள்ளிட்ட போலீசார் போராட்டக் காரர்களை கைது செய்வதாக தெரிவித்தனர். இதனை யடுத்து அறவழியில் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில் நேற்று மணல்குவாரி அமைத்ததை கண்டித்து பொதுமக்கள் திருமானூர் பஸ் நிலையம் அருகே அறவழியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200 பெண்கள் உள்பட 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இது குறித்து தகவலறிந்த அங்கு வந்த போலீசார் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்த கூடாது என பொதுமக்களிடம் கூறினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் போராட்டம் நடத்துவது என்றும், 2 முறை அமைதி பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் மக்களை ஏமாற்றிவிட்டு கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்ததை கண்டித்து நாளை (திங்கட்கிழமை) அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்து கலைந்து சென்றனர்.

மேலும், கொள்ளிடம் ஆற்றில் புதிய மணல் குவாரி அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமானூரில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது, கொள்ளிடம் ஆற்றில் போராட்டங்கள் எதுவும் செய்ய வேண்டாம். திருமானூர் பகுதியில் செய்து கொள்ளுங்கள் நாங்கள் பாதுகாப்பு தருகிறோம் எனக்கூறியுள்ளனர். ஆனால், நேற்று அறவழியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது, அனுமதி பெறாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதால் கைது செய்கிறோம் என போலீசார் மிரட்டியுள்ளனர். இதனால் போலீசார் மாத்தி மாத்தி பேசுகின்றனர் என பொதுமக்கள் வேதனையோடு தெரிவித்தனர். 

Next Story