திருச்சி மாவட்டத்தில் இன்று ‘நீட்’ தேர்வை 9 ஆயிரத்து 420 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர்


திருச்சி மாவட்டத்தில் இன்று ‘நீட்’ தேர்வை 9 ஆயிரத்து 420 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 5 May 2018 11:00 PM GMT (Updated: 5 May 2018 9:13 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் இன்று ‘நீட்’ தேர்வை 9 ஆயிரத்து 420 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

திருச்சி,

மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. திருச்சி மாநகரில் 7 மையங்களிலும், மாவட்ட பகுதியில் 5 மையங்களும் என மொத்தம் 12 மையங்களில் ‘நீட்’ தேர்வு இன்று நடக்கிறது.

வயலூர் அமிர்தா வித்யாலயா பள்ளியில் 540 பேரும், வயலூர் பாரதியார் நகர் காவேரி குளோபல் பள்ளியில் 660 பேரும், திருச்சி கமலா நிகேதன் பள்ளியில் 840 பேரும், துப்பாக்கி தொழிற்சாலை அருகில் உள்ள எண் 1 கேந்திர வித்யாலயா பள்ளியில் 600 பேரும், எண் 2 கேந்திர வித்யாலயா பள்ளியில் 1,200 பேரும், தென்னூர் மகாத்மா காந்தி நூற்றாண்டு நினைவு வித்யாலயா பள்ளியில் 480 பேரும் ‘நீட்’ தேர்வை எழுதுகின்றனர்.

இதேபோல காட்டூர் மாண்ட்போர்ட் பள்ளியில் 660 பேரும், திருச்சி காஜா நகர் சமத் மேல்நிலைப்பள்ளியில் 1,200 பேரும், பஞ்சப்பூர் சாரநாதன் என்ஜினீயரிங் கல்லூரியில் 1,440 பேரும், ஸ்ரீரங்கம் ஸ்ரீவிகாஷ் வித்யாஸ்ரமம் முதுநிலை இடைநிலைப்பள்ளியில் 720 பேரும், திருச்சி சென்னை ரிங் ரோடு அருகே உள்ள ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் 600 பேரும், திருவானைக்கோவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி வித்யாலயா பள்ளியில் 480 பேரும் என மொத்தம் திருச்சி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 420 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். வெளிமாநிலத்திற்கு ‘நீட்’ தேர்வு எழுத சென்ற மாணவ-மாணவிகளுக்கு தேவையான உதவிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்குள் காலை 9.30 மணிக்குள் இருக்க வேண்டும். காலை 9.30 மணிக்கு பிறகு வருபவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ‘நீட்’ தேர்வு மையங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக திருச்சியில் இருந்து நேற்று காலை கேரள மாநிலத்திற்கு சென்ற மாணவ-மாணவிகளுக்கு சில சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்பினர் தேவையான உதவிகளை செய்து அனுப்பி வைத்தனர். 

Next Story