வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் திசையன்விளை முருங்கை இலை
திசையன்விளை முருங்கை இலை, வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகிறது.
திசையன்விளை
நெல்லை மாவட்டம் திசையன்விளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சொட்டுநீர் பாசனம் மூலம் அதிக அளவு விவசாயம் நடந்து வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் முருங்கைக்காய்கள் விமானம் மூலம் துபாய், ஓமன், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
முருங்கைக்காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது முருங்கை இலைகளுக்கும் மவுசு கூடியுள்ளது. அதாவது, முருங்கை இலைகளும் தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கடகுளம் கிராமத்தை சேர்ந்தவர் டெல்சன் (வயது 45). இவர் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவர் ஏற்றுமதி நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
அப்போது அவரது மனதில் நாமும் ஏற்றுமதியாளராக மாற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதுவும் நமது பகுதியில் விளையும் முருங்கை இலைகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யலாம் என்று நினைத்தார். அவர் நினைத்தது மட்டும் அல்லாமல் அதனை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது.
முருங்கை இலைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கான உரிமையை பெற்றார். கடந்த இரண்டு ஆண்டுகளாக முருங்கை இலைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். கூலி தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கிய அவர், இன்று 50 பேருக்கு வேலை கொடுக்கும் ஏற்றுமதியாளராக உள்ளார். இதற்காக 50 ஏக்கர் முருங்கை தோப்புகளை குத்தகைக்கு எடுத்துள்ளார். முருங்கை விவசாயிகளிடம் ஒரு கிலோ முருங்கை இலை ரூ.15-க்கு கொள்முதல் செய்கிறார்.
அதிகாலையில் முருங்கை இலைகளை முருங்கை தோப்புகளில் இருந்து பறித்து வந்து அதை ஓலை கொட்டகைகளில் விரித்துவைத்து (வரிசையாக அடுக்கி), அதன்மீது தண்ணீர் தெளித்து 150 கிராம் எடையில் பாலிதீன் பைகளில் பேக்கிங் செய்யப்படுகிறது.
பின்பு ஐஸ்பார் வைக்கப்பட்ட தெர்மாகோல் பெட்டிகளில் அடைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு திருச்சி, திருவனந்தபுரம், கொச்சி விமான நிலையங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த தொழிலுக்காக கடகுளத்தில் உள்ள தனது வீட்டின் அருகில் ஓலை கொட்டகை அமைத்துள்ளேன். ஏற்றுமதிக்கு குரூஸ், ஆண்டிபட்டி ரக முருங்கை இலைகளை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஏற்றுமதியை அதிகரிக்க அரசு இப்பகுதியில் குளிர்பதன கிடங்கு அமைத்து கொடுத்தால் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடியும் என்று ஏற்றுமதியாளர் டெல்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story