கோடை விழாவையொட்டி கொடைக்கானலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
கொடைக்கானலில், கோடை விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கொடைக்கானல்
‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் தொடங்கியுள்ளது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி இம்மாதத்தில் மலர் கண்காட்சியுடன் கோடை விழா தொடங்க உள்ளது. கோடை விழாவை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டு ரூ.10 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் ரோஜா பூங்காவையும் திறந்து வைக்க உள்ளார். இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதகையில் இருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளார்.
இதனால் கொடைக்கானலில், கோடை விழாவையொட்டி சாலை சீரமைப்பு உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், கொடைக்கானலில் நடைபெறும் கோடை விழாவில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் வருகை தர உள்ளார். இதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை. உதகையில் வருகிற 18-ந் தேதி மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் தொடங்கிவைப்பதால், 19-ந் தேதி கொடைக்கானலில் கோடை விழா தொடங்கப்படும் நிலை உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளது, என்றார்.
Related Tags :
Next Story