பாஞ்சாலங்குறிச்சியில், இன்று வீரசக்கதேவி கோவில் திருவிழா தொடக்கம் பலத்த போலீஸ் பாதுகாப்பு


பாஞ்சாலங்குறிச்சியில், இன்று வீரசக்கதேவி கோவில் திருவிழா தொடக்கம் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 10 May 2018 9:00 PM GMT (Updated: 10 May 2018 7:47 PM GMT)

பாஞ்சாலங்குறிச்சியில் இன்று(வெள்ளிக்கிழமை) வீரசக்கதேவி கோவில் திருவிழா தொடங்குகிறது.

ஓட்டப்பிடாரம், 

பாஞ்சாலங்குறிச்சியில் இன்று(வெள்ளிக்கிழமை) வீரசக்கதேவி கோவில் திருவிழா தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

கோவில் திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்கதேவி கோவில் 62-வது ஆண்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி, நாளை (சனிக்கிழமை) வரை 2 நாட்கள் நடக்க உள்ளது.

விழாவை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும், 9 மணிக்கு விழா கொடியேற்றமும், 12 மணிக்கு உச்சிகால பூஜையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு கோவில் வடக்கு மேடையில் நாதஸ்வர நிகழ்ச்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் நடக்க உள்ளது. இரவு 7 மணிக்கு தெற்கு மேடையில் இன்னிசை கச்சேரி மற்றும் சிறுவர்களின் கலை நிகழ்ச்சி நடக்கிறது.

போலீஸ் குவிப்பு

இந்த விழா அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் வகையிலும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு நேற்று மாலை 6 மணி முதல் வருகிற 13-ந்தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நடைமுறையில் இருக்கும்.

இதை தொடர்ந்து, இந்த கோவில் பாதுகாப்பு ஏற்பாட்டுக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் உத்தரவின் பேரில், உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் மேற்பார்வையில் 10 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 30 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை மாவட்டங்களை சேர்ந்த 1,250 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சூரங்குடி, எட்டயபுரம், பசுவந்தனை, சவலாபேரி உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

Next Story