மதுரவாயலில் உடல் அழுகிய நிலையில் கிணற்றில் கட்டிடத் தொழிலாளி உடல் மீட்பு
மதுரவாயலில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் அருகில் உள்ள தரைமட்ட கிணற்றில் உடல் அழுகிய நிலையில் கட்டிடத்தொழிலாளி உடல் மீட்கப்பட்டது.
பூந்தமல்லி,
மதுரவாயல், எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 43). கட்டிடத்தொழிலாளி. இவர், மதுரவாயல் வேல் நகர், 4-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான மதியழகன்(60) என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் கட்டிட பணியில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 7-ந்தேதி வேலை முடிந்து சம்பளம் வாங்கிக்கொண்டு சென்ற ரமேஷ், அதன்பிறகு வேலைக்கு வரவில்லை. அவரது வீட்டுக்கும் செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரை அவருடைய குடும்பத்தினர் தேடி வந்தனர்.
கிணற்றில் பிணமாக மீட்பு
இந்தநிலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டுக்கு அருகில் உள்ள தரைமட்ட கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த கிணற்றுக்குள் எட்டிப்பார்த்த போது, உள்ளே ஆண் பிணம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி, அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த மதுரவாயல் போலீசார், அந்த பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில் அவர், மாயமான கட்டிடத்தொழிலாளி ரமேஷ் என்பது தெரிந்தது.
கட்டிட மேஸ்திரி கைது
ரமேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கட்டுமான பணி நடைபெறும் வீட்டுக்கு அருகில் உயிர் பலி ஏற்படும் வகையில் தரைமட்ட கிணறு இருந்தும், எந்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யாததால் கட்டிட மேஸ்திரி விநாயகம் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் கட்டிடத்தொழிலாளி ரமேஷ், சம்பவத்தன்று கட்டிட வேலை முடிந்து சம்பளம் வாங்கிக்கொண்டு செல்லும்போது தரைமட்ட கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story