ஓவேலியில் கிராம்பு விளைச்சல் குறைந்தது
கூடலூர் பகுதியில் கிராம்பு விளைச்சல் குறைந்துள்ளது.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் தேயிலை, காபி விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் பணப்பயிராக விளங்கக்கூடிய குறுமிளகு, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி ஆகியவையும் விளைகிறது. கூடலூர் ஓவேலி பாரம் பகுதியில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் கிராம்பு, ஏலக்காய் விளைகிறது. இந்த விவசாயத்தில் பெரிய தோட்ட நிறுவனங்கள் மட்டுமே ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் கூடலூர் ஓவேலி பகுதியில் கடந்த ஆண்டு கிராம்பு விளைச்சல் அமோகமாக இருந்தது. கிராம்பு, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே விளையும் தன்மை உடையது. இதனால் தோட்ட நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நியமித்து கிராம்பு காய்களை பறிக்கும் பணியில் ஈடுபடுத்தி வருகின்றன.
விளைச்சல் குறைந்தது
இங்கு அறுவடை செய்யப்படும் கிராம்பு காய்கள் பதப்படுத்தப்பட்டு வணிக ரீதியாக வெளிநாடுக ளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கிராம்பை பராமரிப்பதில் அதிக சிரமம் உள்ளதால், சிறு விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுவது இல்லை. மேலும் ஓவேலி பாரம் பகுதியில் மட்டுமே கிராம்பு விளையக்கூடிய சீதோஷ்ண நிலை நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கிராம்பு விளைச்சல் நடப்பு ஆண்டில் பரவலாக குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அறுவடை செய்த உடன் கிராம்பு செடிகள் கவாத்து செய்யப்பட்டன. இதனால் நடப்பு ஆண்டில் விளைச்சல் குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அறுவடை பணியில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
வேலை இழப்பு
இது குறித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கூறியதாவது:-
கூடலூர் ஓவேலி பாரம் பகுதியில் பராமரிப்பின் காரணமாக கடந்த ஆண்டு கிராம்பு விளைச்சல் அதிகரித்தது. ஒரு கிலோ கிராம்பு காய்கள் பறித்து கொடுத்தால் ரூ.80 சம்பளம் கிடைத்தது. ஒரு நாளைக்கு சராசரியாக 8 கிலோ வரை கிராம்பு காய்கள் பறிக்க முடியும். இதன் மூலம் கணிசமான வருவாய் கிடைத்தது.
ஆனால் அறுவடைக்கு பிறகு செடிகள் கவாத்து செய்யப்பட்டது. இதனால் நடப்பு ஆண்டில் கிராம்பு விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் அறுவடை பணியில் ஈடுபட்டு வந்த பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story