கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் பா.ஜனதா கூட்டணி அரசு அமைக்கும் மந்திரி சுதிர் முங்கண்டிவார் கருத்து

கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் பா.ஜனதா கூட்டணி அரசு அமைக்கும் மந்திரி சுதிர் முங்கண்டிவார் கருத்து
x
தினத்தந்தி 10 May 2018 10:30 PM GMT (Updated: 10 May 2018 10:21 PM GMT)

கர்நாடக தேர்தலில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து பா.ஜனதா கூட்டணி அரசு அமைக்கும் என்று மராட்டிய மந்திரி சுதிர் முங்கண்டிவார் தெரிவித்தார்.

மும்பை, 

கர்நாடக தேர்தலில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து பா.ஜனதா கூட்டணி அரசு அமைக்கும் என்று மராட்டிய மந்திரி சுதிர் முங்கண்டிவார் தெரிவித்தார்.

கர்நாடக சட்டசபை தேர்தல்

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நாளை(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பல்வேறு தலைவர்கள் மாநிலத்தில் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் மராட்டிய நிதித்துறை மந்திரி சுதிர் முங்கண்டிவார் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-

தொங்கு சட்டசபை

கர்நாடகத்தில் தேர்தல் முடிவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் பா.ஜனதா தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைத்து ஆட்சியமைப்போம்.. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியும் வெளியில் இருந்து மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவு கொடுக்க முயற்சிக்கலாம். ஆனால் தேர்தல் முடிவில் நாட்டில் 2 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் எஞ்சி இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைதொடர்ந்து பால்கர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக சிவசேனா வேட்பாளரை அறிவித்து இருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் பால்கர் தொகுதியில் அவர்களது(சிவசேனா) வேட்பாளரை வாபஸ் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

Next Story