கரிசல்பட்டியில் மதநல்லிணக்க மஞ்சுவிரட்டு


கரிசல்பட்டியில் மதநல்லிணக்க மஞ்சுவிரட்டு
x
தினத்தந்தி 11 May 2018 6:10 AM GMT (Updated: 11 May 2018 6:10 AM GMT)

எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் மதநல்லிணக்க மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன.

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே உள்ளது கரிசல்பட்டி. இங்கு பிரசித்திபெற்ற சித்தன்ன சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் திருவிழாவையொட்டி பாரம்பரிய முறைப்படி இந்துகளும், முஸ்லிம்களும் இணைந்து மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் மஞ்சுவிரட்டு நடத்துவார்கள். இந்தநிலையில் சித்தனன் கோவிலில் இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை தொடர்ந்து நேற்று கரிசல்பட்டியில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

முன்னதாக கோவில் காளைகளுக்கு வேட்டி, துண்டுகள் அணிவிக்கப்பட்டு உரிய மரியாதை செய்யப்பட்டது. பின்னர் காளைகள் ஊர்வலமாக மஞ்சுவிரட்டு தொழுவத்திற்கு அழைத்துவரப்பட்டன. இதனையடுத்து கோவில் காளைகள் முதலில் அவிழ்த்துவிடப்பட்டு மஞ்சுவிரட்டு தொடங்கியது. பின்னர் மஞ்சுவிரட்டு காளைகள் தொழுவத்தின் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அழைத்துவரப்பட்ட 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மேலும் சீறிப்பாய்ந்த காளைகளை கரிசல்பட்டி, எஸ்.புதூர், புழுதிப்பட்டி, சிங்கம்புணரி, திருப்பத்தூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வந்திருந்த ஏராளமான மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அடக்கினர்.

இந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் என 10 பேர் காயமடைந்தனர். முடிவில் மஞ்சுவிரட்டில் வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் கட்டில், சேர், வெள்ளி நாணயம் உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்பட்டன. ஆனால் இந்த மஞ்சுவிரட்டு நடத்த உரிய அனுமதி பெறவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் அதே கிராமத்தை சேர்ந்த 10 பேர் மீது புழுதிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story