நாகையில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்


நாகையில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்
x

நாகையில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ்கான் தலைமையில் நடந்தது.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை பணிகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ்கான் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வரைவு வார்டு மறுவரையறை கருத்துக்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல்கட்சி பிரதிநிதிகளிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனை மனுக்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரங்களை மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ்கான் கேட்டறிந்தார்.

மேலும், அரசியல் கட்சி பிரதிநிதிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் உண்மை நிலையை அறிந்து மாநில தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய பரிசீலனை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

உள்ளாட்சி தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேர்தல் நடத்துவதற்கு தேவையான வாக்குச்சீட்டுக்கள் இருப்பு, தற்போதைய பொருட்கள் தேவை, நகர்ப்புற அமைப்புகளுக்கான தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் பொருட்கள் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

முன்னதாக நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள தேர்தல் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அறையை தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ்கான் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்குப்பதிவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அறையில் தீ விபத்து ஏற்படாமல் இருக்கும் வகையில் தீயணைப்பு கருவிகள் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்), உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), செயலர், மாவட்ட ஊராட்சி, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து நகராட்சி ஆணையர்கள், அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story