மாவட்ட செய்திகள்

அமெரிக்க தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது + "||" + A young man arrested by bomb threat

அமெரிக்க தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

அமெரிக்க தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
அமெரிக்க தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் (10-ந் தேதி) இரவு 9.53 மணிக்கு மர்ம நபர் ஒருவர் போனில் பேசினார். தமிழில் பேசிய அந்த நபர் 11-ந் தேதி (நேற்று) அன்று அதிகாலை 3.16 மணிக்கு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு, இணைப்பை துண்டித்துவிட்டார். உடனடியாக இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க தூதரகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதற்கிடையில் பெண் ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசினார்.

அமெரிக்க தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பேசிய நபர், தன்னுடைய கணவர்தான் என்றும், அவர் தெரியாமல் அப்படி பேசிவிட்டார் என்றும், அவரை மன்னித்துவிடுங்கள் என்றும் பேசிவிட்டு போன் இணைப்பை துண்டித்துவிட்டார். அந்த பெண் பேசிய செல்போன் நம்பரும், ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பேசிய நபரின் செல்போன் நம்பரும் ஒரே நம்பராக இருந்தது.

குறிப்பிட்ட செல்போன் நம்பரில் தனிப்படை போலீசார் பேசியபோது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரே போனை எடுத்து பேசினார். அவர் தன்னுடைய பெயர் சவுபர் சாதிக் பாஷா என்றும், மண்ணடி லிங்கி செட்டி தெருவைச் சேர்ந்தவர் என்றும் கூறினார். தானே போலீஸ் நிலையத்திற்கு வந்து சரண் அடைவதாகவும் தெரிவித்தார்.

சொன்னபடி நேற்று ராயப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அவர் நேரடியாக வந்து சரண் அடைந்தார். அவர் குடிபோதையில் அவ்வாறு பேசிவிட்டதாகவும், அமெரிக்க தூதரகத்துக்கு முன்பு விசாவுக்காக பொதுமக்களை நீண்டநேரம் வெயிலில் நிற்கவைக்கிறார்கள் என்றும், இதனால் மிரட்டல் விடுத்து பேசியதாகவும் தெரிவித்தார். அவர் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் கைது செய்யப்பட்டார்.