வேதாரண்யம் பகுதியில் மாங்காய் விளைச்சல் குறைந்தது


வேதாரண்யம் பகுதியில் மாங்காய் விளைச்சல் குறைந்தது
x
தினத்தந்தி 12 May 2018 1:34 PM IST (Updated: 12 May 2018 1:34 PM IST)
t-max-icont-min-icon

வெயிலின் காரணமாக வேதாரண்யம் பகுதியில் மாங்காய் விளைச்சல் குறைந்தது. மேலும், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் புஷ்பவனம், செம்போடை, கத்தரிப்புலம், தாமரைப்புலம், நாலுவேதபதி, குரவப்புலம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் மாங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் ஒட்டு, செந்துரா, மல்கோவா, பங்கனப்பள்ளி, நீலம், ருமேனியா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாங்காய் ரகங்கள் உள்ளன. சீசன் காலமான மே, ஜூன் காலத்தில் 10 ஆயிரம் டன் மாங்காய், மாம்பழங்கள் கேரளா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது கடுமையான வெயில் காரணமாக வேதாரண்யம் பகுதியில் மாங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் 5 ஆயிரம் டன் எதிர்பார்த்த நிலையில் 2 ஆயிரம் டன் தான் விளைச்சல் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் மாங்காய் விலையும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதில் நீலம் மங்காய் கிலோ ரூ.5-க்கும், செந்தூரா கிலோ ரூ.20-க்கும் ஒட்டு கிலோ ரூ.10-க்கும், ருமேனியா, பங்கனப்பள்ளி, மல்கோவா, காலப்பாடு கிலோ ரூ.30-க்கும் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- எங்கள் பகுதியில் அதிகளவில் மாங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் சொந்தமாக வியாபாரம் செய்யமுடியாமல் வியாபாரிகளிடமே மாந்தோப்புகளை குத்தகைக்கு விட்டுவிடுகின்றனர். வியாபாரிகள் அதிகம் லாபம் பெற வேண்டி மா மரத்தை அதிக அளவில் காய்க்க வைப்பதற்காக ஏராளமான ரசாயன மருந்துகளை அடித்து வருகின்றனர். இதனால்் பல ஆண்டுகள் காய்க்க வேண்டிய மா மரங்கள் 5 முதல் 10 ஆண்டுகளில் பட்டுப்போய்விடுகிறது. வேதாரண்யம் பகுதியில் கடுமையான வெயிலின் காரணமாக மாங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வேதாரண்யம் பகுதியில் வந்து கொள்முதல் செய்யாததால், விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். வேதாரண்யம் பகுதியில் மாம்பழ தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றனர். 

Next Story