முறையாக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து ஜக்கனாரை ஊராட்சி அலுவலகம் முன் பெண்கள் தர்ணா போராட்டம்


முறையாக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து ஜக்கனாரை ஊராட்சி அலுவலகம் முன் பெண்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 12 May 2018 10:45 PM GMT (Updated: 12 May 2018 7:15 PM GMT)

முறையாக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து ஜக்கனாரை ஊராட்சி அலுவலகம் முன் பெண்கள் தர்ணா போராட்டம் செய்தனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் ஜக்கனாரை ஊராட்சிக்கு உட்பட்ட ஜக்கனாரை கீழ்கேரி கிராமத்தில் 120 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராம மக்களுக்கு, தாழ்வான பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு குடிநீர் தொட்டியில் சேகரிக்கப்பட்டு குடியிருப்புகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இங்கு அடிக்கடி மோட்டார் பழுது அடைகிறது. இது போன்ற காரணங்களால் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இது குறித்து கீழ்கேரி கிராம மக்கள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோருக்கு தொடர்ந்து மனுக்கள்அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் கடந்த 3 மாதத்திற்கு முன்பு மாவட்ட கலெக்டரிடம் மனு அளித் தனர்.

இந்த நிலையில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யாததால் ஆத்திரம் அடைந்த கிராம பெண்கள், ஜக்கனாரை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பாரதி தலைமையில் நேற்று காலை ஜக்கனாரை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:-

கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கிணறு மற்றும் நீர்நிலைகளில் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது. ஆனால் மோட்டார் அறையில் மோட்டார் அடிக்கடி பழுது ஏற்படுவதாக கூறி எங்கள் கிராமத்திற்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இதை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம். ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கா விட்டால் கிராம மக்களை ஒன்று திரட்டி குடும்பத்துடன் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஜக்கனாரை ஊராட்சி செயலர் ராஜ்குமார் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை யால் கீழ்கேரி கிராமத்திற்கு தண்ணீரை உந்தும் மோட்டார் பழுதடைந்து விட்டது. 30 எச்.பி திறன் கொண்ட அதிக பளுவான மோட்டாராக இருப்பதால் கிணற்றில் இருந்து உடனடியாக எடுத்து பழுது நீக்க முடிய வில்லை.

தற்போது மோட்டாரை பழுது நீக்கி மீண்டும் பொருந்தும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மோட்டார் பொருத்திய உடன் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றார். 

Next Story