திருமணத்திற்கு பெண் பார்த்தது பிடிக்காததால் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு காவலர் தற்கொலைக்கு முயற்சி


திருமணத்திற்கு பெண் பார்த்தது பிடிக்காததால் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு காவலர் தற்கொலைக்கு முயற்சி
x
தினத்தந்தி 12 May 2018 11:15 PM GMT (Updated: 12 May 2018 7:22 PM GMT)

திருமணத்திற்கு பெண் பார்த்தது பிடிக்காததால் பிளேடால் கழுத்தை அறுத்து கொண்டு பயிற்சி காவலரான கரூர் போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டரின் மகன் தற்கொலைக்கு முயன்றார். அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தஞ்சாவூர்,

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையை சேர்ந்தவர் நாகமாணிக்கம். இவர் கரூரில் போக்குவரத்து பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார். இவருடைய மகன் தினேஷ்குமார்(வயது 26). என்ஜினீயரான இவர் இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதனால் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சேர்ந்து பல்வேறு பயிற்சிகளை பெற்று வருகிறார். இந்த பயிற்சி முகாம் வருகிற 30-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

நேற்று வழக்கம்போல் தினேஷ்குமார் பயிற்சிக்கு சென்றார். மதிய உணவு இடைவேளையில் தனது நண்பர்களுடன் தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள பயிற்சி காவலர்கள் தங்கும் இடத்திற்கு வந்தார். பின்னர் தனது நண்பர்களிடம் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் நண்பர்கள் சிலர், கழிவறைக்கு சென்று பார்த்தனர். அங்கு தரை முழுவதும் ரத்தமாக காணப்பட்டதுடன் தினேஷ்குமார் தனது கழுத்திலும், இடது கையிலும் பிளேடால் அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அவர்கள் விரைந்து வந்து தினேஷ்குமாரை மீட்டு போலீஸ் வாகனத்திலேயே தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் பற்றி அறிந்த போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் நேரில் சென்று தினேஷ்குமாருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தனர். மேலும் தினேஷ்குமார் பேசும் நிலையில் இருந்ததால் அவரிடம் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார்.

அதில், தினேஷ்குமாருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் பெண் பார்த்தனர். பயிற்சி முடிந்தவுடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இந்த தகவலை தினேஷ்குமாரிடம் தெரிவித்தனர். ஆனால் தனக்கு பெண் பார்த்தது பிடிக்கவில்லை என்றும், அதனால் தற்போது தனக்கு திருமணம் வேண்டாம் என்றும் கூறியுள்ளார். பயிற்சி முடிந்தவுடன் திரு மணம் செய்து வைக்கும் முடிவில் பெற்றோர் உறுதியாக இருந்தால் தினேஷ்குமார் தற்கொலைக்கு முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது.

இது குறித்து தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமகாலிங்கம் விசாரணை நடத்தி வருகிறார்.

பயிற்சி காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தஞ்சையில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story