செய்துங்கநல்லூர் அருகே நர்ஸ் மர்மச்சாவு; உதவி கலெக்டர் விசாரணை சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார்


செய்துங்கநல்லூர் அருகே நர்ஸ் மர்மச்சாவு; உதவி கலெக்டர் விசாரணை சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார்
x
தினத்தந்தி 12 May 2018 8:30 PM GMT (Updated: 12 May 2018 7:32 PM GMT)

செய்துங்கநல்லூர் அருகே நர்ஸ் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த் விசாரணை நடத்தி வருகிறார்.

ஸ்ரீவைகுண்டம், 

செய்துங்கநல்லூர் அருகே நர்ஸ் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த் விசாரணை நடத்தி வருகிறார். சாவில் சந்தேகம் இருப்பதாக நர்சின் தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

நர்ஸ்

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள சந்தையடியூர் வேலங்காட்டான் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 40). இவர் நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஆனந்த ஈசுவரி (36). இவர் நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பூஜா (4) என்ற மகள் உள்ளாள்.

கடந்த 4-ந் தேதி இரவில் ஆனந்த ஈசுவரி தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, அவரது காலில் விஷ பூச்சி கடித்ததை போன்று உணர்ந்தார். உடனே அவர் கண்விழித்தபோது விஷ பூச்சி எதுவும் இல்லாததால், மீண்டும் தூங்கி விட்டார். மறுநாள் காலையில் ஆனந்த ஈசுவரிக்கு காலில் வேதனை அதிகரித்ததால் கருங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

பின்னர் ஆனந்த ஈசுவரி நெல்லையில் நர்சாக வேலை பார்த்த ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அப்போது அவர் தனக்கு உடல்நலம் சரியானதாக கூறி, வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி ஆனந்த ஈசுவரிக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டது. உடனே அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஆனந்த ஈசுவரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே ஆனந்த ஈசுவரியின் தந்தை பெரியசாமி தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 5 ஆண்டுகளில் நர்ஸ் மர்மமான முறையில் இறந்ததால், தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story