போலீஸ் ஏட்டு கொலையில் கைதான முக்கிய குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்


போலீஸ் ஏட்டு கொலையில் கைதான முக்கிய குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 13 May 2018 2:30 AM IST (Updated: 13 May 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் ஏட்டு கொலையில் கைதான முக்கிய குற்றவாளி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இட்டமொழி, 

போலீஸ் ஏட்டு கொலையில் கைதான முக்கிய குற்றவாளி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

பரபரப்பு வாக்குமூலம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு ஜெகதீஷ் துரை, மணல் கொள்ளையர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த வடக்கு விஜயநாராயணம் போலீசார் 5 பேரை கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளியான முருகன் கேரளாவில் பதுங்கி இருந்த போது நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், முருகன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்விவரம் வருமாறு:-

பந்தல் தொழிலாளி

நான், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கேரள மாநிலம் உம்பூரில் பந்தல் போடும் தொழில் செய்து வந்தேன். தற்போது குளங்களில் கரம்பை மண் அள்ளுவதற்கு தாலுகா அலுவலகத்தில் அனுமதி சீட்டு வாங்கினேன். எனக்கு சொந்தமாக டிராக்டர் கிடையாது. ஆகையால் திசையன்விளை அருகே உள்ள கஸ்தூரிரெங்கபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரிடம் வாடகைக்கு டிராக்டர் வாங்கி, பகல் நேரங்களில் கரம்பை மண் அள்ளி வந்தேன். இரவு நேரங்களில் என்னுடைய நண்பர்கள் கிருஷ்ணன், முருகபெருமாள், ராஜாரவி உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து ஆற்றுமணல், குளத்து மண் கடத்தி வந்தேன்.

கடந்த 6-ந் தேதி இரவும் நாங்கள் டிராக்டரில் மணல் கடத்தி வந்தோம். அப்போது ஏட்டு ஜெகதீஷ்துரை எங்களை வழிமறித்தார். நாங்கள் காட்டுப்பகுதியில் சென்ற போது டிராக்டர் பழுதானது. உடனே அங்கிருந்து தப்பிச் சென்றோம். பின்னர் ஜெகதீஷ்துரை மட்டும்தான் உள்ளார். டிராக்டரை அங்கிருந்து எப்படியாவது எடுத்துச் சென்றுவிட வேண்டும் என்று முடிவு செய்து டிராக்டரை அங்கிருந்து ஓட்டிச் செல்ல முயன்றோம்.

அடித்துக்கொலை

அப்போது போலீஸ் ஏட்டு ஜெகதீஷ் துரை டிராக்டரை எடுத்து செல்ல விடாமல் தடுத்ததுடன், எங்களை பிடித்து போலீசில் ஒப்படைக்க போவதாக கூறினார். அப்போது ஏட்டுவுடன் எங்களுக்கு தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த நான், டிராக்டரில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து ஏட்டு தலையில் ஓங்கி அடித்தேன். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். உடனே நாங்கள் அங்கிருந்து தப்பிச் சென்றோம்.

சொந்த ஊரில் இருந்தால் போலீசார் பிடித்து விடுவார்கள் என நினைத்து கேரள மாநிலம் உம்பூருக்கு சென்று விட்டேன். போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் முருகன் கூறியுள்ளார்.

இதையடுத்து போலீசார் முருகனை நாங்குநேரி நீதிபதி சந்திரசேகர் வீட்டில் ஆஜர்படுத்தி நேற்று இரவு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story