ஷேர் ஆட்டோவில் சென்றபோது கல்லூரி மாணவியை கடத்த முயன்ற வழக்கில் 2 பேர் கைது
கல்லூரி மாணவியை ஷேர் ஆட்டோவில் கடத்த முயன்றதாக அதன் டிரைவர் மற்றும் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
கல்லூரி மாணவி அனைவருடனும் சகஜமாக பேசி பழகியதால் அவரை கடத்தி உல்லாசமாக இருக்க திட்டமிட்டதாக கைதான டிரைவர் தெரிவித்தார்.
கல்லூரி மாணவியை கடத்த முயற்சி
சென்னையை அடுத்த அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த 21 வயது மாணவி, பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று பல்லாவரத்தில் இருந்து கிண்டிக்கு மின்சார ரெயிலில் வந்த அவர், அங்கிருந்து அய்யப்பன்தாங்கலுக்கு ஷேர் ஆட்டோவில் சென்றார்.
ஆனால் ஷேர்ஆட்டோ அய்யப்பன்தாங்கல் செல்லாமல் போரூரில் இருந்து மாங்காடு நோக்கி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி, தன்னை கடத்த முயல்வதை அறிந்து ஷேர் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பினார்.
2 பேர் கைது
இது பற்றி கிண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் அடையாறு துணை கமிஷனர் ரோகித்நாதன் மேற்பார்வையில் கிண்டி உதவி கமிஷனர் பாண்டியன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் இது தொடர்பாக கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஷேர் ஆட்டோ ஓட்டி வரும் டிரைவர் கொசப்பேட்டையை சேர்ந்த ஜனார்த்தனன்(27) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர் தனது நண்பரான கோவூரை சேர்ந்த பவீன்(25) என்பவருடன் சேர்ந்து கல்லூரி மாணவியை ஷேர் ஆட்டோவில் கடத்திச்செல்ல முயன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பாலியல் தொல்லை
கைதான ஜனார்த்தனனிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தினர். அதில், அந்த கல்லூரி மாணவி பல்லாவரத்தில் இருந்து ரெயிலில் கிண்டி வந்து, அங்கிருந்து தினமும் ஆட்டோவில்தான் அவரது வீட்டுக்கு செல்வார். அப்போது அனைவரிடமும் அவர் சகஜமாக பேசி பழகியதால் அவருடன் உல்லாசமாக இருக்க திட்டமிட்ட ஜனார்த்தனன், சம்பவத்தன்று தனது நண்பர் பவீனுடன் சேர்ந்து அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுப்பதற்காக ஷேர்ஆட்டோவில் கடத்திச் செல்ல முயன்றதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.
கல்லூரி செல்லும் இளம்பெண்கள், வெளி நபர்களுடன் வெகுளித்தனமாக பேசி பழகுவதை தவிர்த்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story