மாவட்ட செய்திகள்

நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிர்ப்பு: விஞ்ஞானிகளுக்கு பொட்டிப்புரம் கிராம மக்கள் கடிதம் + "||" + Opposition to the Neutrino Research Center: Letter to the Villagers of Pottipuram to Scientists

நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிர்ப்பு: விஞ்ஞானிகளுக்கு பொட்டிப்புரம் கிராம மக்கள் கடிதம்

நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிர்ப்பு: விஞ்ஞானிகளுக்கு பொட்டிப்புரம் கிராம மக்கள் கடிதம்
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விஞ்ஞானிகளுக்கு பொட்டிப்புரம் கிராம மக்கள் கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், தங்களுக்கு உடன்பாடு இல்லாத திட்டத்தை திணிப்பது அநீதியானது என்று மக்கள் கூறியுள்ளனர்.
தேனி,

போடி அருகே பொட்டிப்புரம் பகுதியில் உள்ள அம்பரப்பர் மலையில் ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இந்தநிலையில், ‘நியூட்ரினோ ஆய்வு மையத்தை நிறைவேற்றத் துடிக்கும் விஞ்ஞானிகளுக்கு ஒரு திறந்த மடல்’ எனும் தலைப்பில் நீண்ட ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பொட்டிப்புரம் கிராம ஊராட்சி பொதுமக்கள் சார்பில், இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பொட்டிப்புரம் கிராம மக்களிடம் கேட்ட போது, அவர்கள் தபால் மூலமாக அலகாபாத்தில் உள்ள இந்திய தேசிய அறிவியல் அகாடமியில் பணிபுரியும் விஞ்ஞானிகளுக்கு அந்த கடிதத்தை அனுப்பி உள்ளதாக கூறினர்.

கிராம மக்கள் அனுப்பி உள்ள அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பொட்டிப்புரம் ஊராட்சியில் வாழும் நாங்கள், இந்த நாட்டின் மிகச் சாதாரண குடிமக்கள். நியூட்ரினோ ஆய்வு செய்வதற்காக தேர்ந்தெடுத்திருக்கும் இடம், நேரடியாக எங்கள் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. எனவே அதுபற்றி விஞ்ஞானிகளாகிய உங்களிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம்.

உங்கள் ஆய்வுத் திட்டத்தின் விண்ணப்பத்தை, தமிழக சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு நிபுணர்கள் ஏன் நிராகரித்தார்கள் என்று தெரியுமா? நீங்கள் ஆய்வகம் அமைக்கவிருக்கும் அம்பரப்பர் மலையைப் பற்றியும், அதன் சுற்றுப்புறங்கள் பற்றியும் அந்த நிபுணர்கள் கூறியதை ஒருவேளை நீங்கள் மறந்திருக்கலாம்! எனவே அந்த விவரங்களை மீண்டும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.

மிகக் கடினமான பாறையில் சுரங்கம் தோண்டுவதற்கு, உயர்திறனுடைய வெடி மருந்துகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். மேலும் அதில் இருந்து சுமார் 6 லட்சம் கன மீட்டர் அளவுக்கு பாறைக் கழிவுகளை வெளியேற்ற வேண்டும். சுரங்கம் அமையும் மலை தரைமட்டத்தில் இருந்து 1,485 மீட்டர் உயரமுடையது.

இவ்வளவு ஆழத்தில் சுரங்கம் தோண்டும்போது பாறையின் கீழ் நோக்கிய அழுத்தம், ஒரு சதுர மீட்டருக்கு 270 கிலோவுக்கும் அதிகமாக இருக்கும். இதனால் சுரங்கத்தின் உள்பகுதியில் பாறைவெடிப்பு மற்றும் உள்புற சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்படுதல் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். இந்த ஆபத்தை தவிர்ப்பதற்கான புவியியல் தொழில்நுட்ப அறிக்கை எதுவும் உங்கள் விண்ணப்பத்தில் இல்லை.

ஆய்வகம் அமைய உள்ள இடம், சர்வதேச அளவில் ‘பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பெருக்க மண்டலமாக‘ அறிவிக்கப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வருகிறது. அம்பரப்பர் மலையில் உருவாக்க இருக்கும் நியூட்ரினோ ஆய்வக வேலைகளால் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ஆபத்துகளையும் மேற்கண்ட நிபுணர்கள் குழு அறிக்கை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

கண்ணுக்குத் தெரியாத நியூட்ரினோவுக்காக இவ்வளவு சிரமப்படும் நீங்கள், கண்முன்னே உள்ள எங்கள் பிரச்சினைகளை திரும்பிக்கூட பார்க்க மறுப்பது ஏன்?. இந்த ஆராய்ச்சிக்காக தினமும் 3.40 லட்சம் லிட்டர் தண்ணீரை எங்கள் முல்லைப் பெரியாற்றில் இருந்து எடுக்க உள்ளர்கள்.

அந்த பெரியாற்று நீர், 5 மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தடியடி, துப்பாக்கி சூடு, சிறை, வழக்கு என்று போராடிப் பெற்ற உரிமை. ஆய்வகத் திட்டத்தை சுற்றியுள்ள கிராம மக்கள், குடிநீர் வசதி கேட்டு மாநில அரசிடம் நீண்டகாலமாக கையேந்தி வருகிறோம்.

அம்பரப்பர் மலையை நாங்கள் கடவுளாக வணங்கி வருகிறோம். எங்களின் வாழ்வாதாரமாக மட்டுமல்ல, பல்வேறு இயற்கை சீற்றங்களில் இருந்தும் இம்மலைதான் எங்களை பாதுகாத்து வருவதாக, பல தலைமுறைகளாக நாங்கள் நம்பி வருகிறோம். எங்கள் கலாசார பண்பாட்டு விஷயங்களை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது.

எங்களுக்கு உடன்பாடு இல்லாத ஒரு திட்டத்தை, எங்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக் குறியாக்கும் திட்டத்தை, எங்கள் மீது திணிப்பது அநீதியானது என்று கருதுகிறோம். இந்த ஜனநாயக நாட்டில் எங்களை அமைதியாக வாழ அனுமதியுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.