திண்டுக்கல் தங்கும் விடுதியில் பயங்கரம்: கள்ளக்காதலியை கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை
திண்டுக்கல்லில் உள்ள தங்கும் விடுதியில் கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதிக்கு, கடந்த 10-ந்தேதி காலை ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் வந்தனர். அவர்கள் 2 பேரும், தங்களை கணவன்-மனைவி என்று கூறி விடுதியில் அறை எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் 2 பேரும் ஜோடியாக வெளியே சென்றுவிட்டு மீண்டும் அறைக்கு வந்தனர்.
பின்னர் மாலை வரை அறைக்கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கதவை தட்டினர். இருப்பினும் எந்த பதிலும் இல்லை. கதவும் திறக்கப்படவில்லை. இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அறைக்கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர். அங்கு கண்ட காட்சி போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தது. அதாவது, வாயில் நுரை தள்ளியநிலையில் கட்டிலில் வாலிபர் பிணமாக கிடந்தார். அந்த இளம்பெண், கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கழிவறையில் கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) வீரபாண்டி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். போலீசார் நடத்திய விசாரணையில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் பெயர் பிரசாந்த் (வயது 26). கூலித்தொழிலாளி. இவர், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கொங்கர்குளத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் என்றும் தெரியவந்தது.
இதேபோல் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் பாலாம்பிகா (29). இவரும், கொங்கர்குளத்தை சேர்ந்தவர் தான். இவர்கள் 2 பேரும் கள்ளக்காதல் ஜோடி என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக இருவரின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனால் பதறிப்போன 2 பேரின் உறவினர்களும் திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
பிரசாந்த் கோவையில் உள்ள ஒரு நகைப்பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. பாலாம்பிகாவுக்கு, திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் சிறுவயதிலேயே காதலித்து வந்தனர்.
இந்தசூழ்நிலையில் பாலாம்பிகாவை, அதே பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவருக்கு அவருடைய பெற்றோர் திரு மணம் செய்து வைத்தனர். இருப்பினும் பிரசாந்த் உடனான காதல் தொடர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இதனை அறிந்த பாலாம்பிகாவின் கணவர் நடராஜ், 2 பேரையும் கண்டித்தார்.
இந்தநிலையில் பிரசாந்தும், பாலாம்பிகாவும் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல்லில் உள்ள தங்கும் விடுதியில் தங்கினர். இதற்கிடையே பாலாம்பிகாவுக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பிரசாந்துக்கும், பாலாம்பிகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த பிரசாந்த், பாலாம்பிகாவை தான் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றார். பின்னர், ஏற்கனவே வாங்கி வைத்திருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது
Related Tags :
Next Story