மாவட்ட செய்திகள்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில்ரூ.3 கோடியில் 2 கிலோ மீட்டருக்கு தடுப்பு சுவர்முழுப்பகுதியையும் பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை + "||" + Pallikaranai In the marshland Preventing wall for 2km

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில்ரூ.3 கோடியில் 2 கிலோ மீட்டருக்கு தடுப்பு சுவர்முழுப்பகுதியையும் பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில்ரூ.3 கோடியில் 2 கிலோ மீட்டருக்கு தடுப்பு சுவர்முழுப்பகுதியையும் பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.3¼ கோடியில் 2 கிலோ மீட்டருக்கு தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது.
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் சதுப்பு நிலம் உள்ளது. ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, மீனம்பாக்கம், வேளச்சேரி, கீழ்கட்டளை, பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் இருந்து நீர் கால்வாய் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வந்து அங்கிருந்து கடலுக்கு செல்லும்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வேளச்சேரியில் இருந்து தொடங்கி பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், பெரும்பாக்கம் போன்ற சுற்றுப்புற பகுதிகளில் நிறைந்து இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக சதுப்பு நில பகுதியில் சென்னை மாநகராட்சி குப்பை கொட்டும் கிடங்கு, மத்திய அரசின் காற்றாலை நிறுவன அலுவலகம் போன்றவற்றுக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டதால் சுமார் 18 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த சதுப்பு நிலம் தற்போது சுமார் 1,700 ஏக்கராக குறைந்து உள்ளது. அதோடு இந்த சதுப்புநிலத்தில் கோரைப்புற்கள் அதிகமாக வளர்ந்து நிற்கின்றன.

மாசடையும் தண்ணீர்

மேலும் துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், நன்மங்கலம், கோவிலம்பாக்கம் போன்ற பகுதிகளில் வீடுகளில் இருந்து எடுக்கப்படும் கழிவுநீர் லாரிகள் மூலமாக கொண்டு நள்ளிரவு நேரங்களில் சதுப்பு நிலத்தில் கலக்கப்படுகின்றன. இதுதவிர சதுப்பு நிலத்தின் பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதால் சதுப்பு நிலத்தின் பெரும் பகுதி குப்பையாகவே காட்சியளிக்கிறது.

இந்த சதுப்பு நிலம் ஒரு காலத்தில் சென்னை புறநகர் பகுதிகளில் கிடைக்கும் மழைநீரை தேக்கி வைக்கும் இடமாக இருந்தது. ஆனால் சதுப்பு நிலத்தின் பரப்பளவு குறுகிவிட்டதாலும், நீர் தேக்க முறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படாததாலும் சதுப்பு நிலத்தின் ஒரு சில பகுதிகள் வறண்டு காணப்படுகிறது. மேலும் குப்பைகள் மற்றும் கழிவுநீர் கலக்கப்படுவதால் இருக்கிற குறைந்த அளவிலான தண்ணீரும் மாசு அடைந்து வருகிறது.

இந்த சதுப்பு நிலத்திற்கு அதிகமான பறவைகள் வந்து தங்கியிருப்பதால் பறவைகள் சரணாலயமாக மாறி வருகிறது. இதனை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் பள்ளிக்கரணை வேளச்சேரி சாலை, துரைப்பாக்கம் ரேடியல் சாலை ஆகிய பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் குடைகள் அமைத்தனர். ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் பொதுமக்கள் அங்கு பறவைகளை பார்க்க முடியாத நிலைதான் இருக்கிறது.

2 கிலோ மீட்டருக்கு தடுப்பு சுவர்

இந்நிலையில் சதுப்பு நிலத்தை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். முதற்கட்டமாக வேளச்சேரியில் இருந்து பள்ளிக்கரணை கைவேலி வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.3 கோடியே 20 லட்சம் செலவில் தடுப்பு சுவர் ஏற்படுத்தி கரைகள் அமைக்கப்படுகின்றன.

மேலும் இந்த பகுதியில் பறவைகள் வந்து தங்கியிருக்க குளங்கள் ஏற்படுத்தப்பட்டு மரக்கிளைகள் வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நிழற்குடைகள் அமைக்கும் பணிகளும் நடக்கிறது. கரையை சுற்றி மரங்களும் நடப்படுகின்றன.

ஆனால் தற்போது மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் சதுப்பு நிலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கானது மட்டுமே. சதுப்பு நிலத்தின் முழு பகுதிக்கு தடுப்பு சுவர் ஏற்படுத்தினால் தான் ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முழுமையான பறவைகள் சரணாலயம்

மேலும் சதுப்பு நிலத்தில் உள்ள கோரைப்புற்கள் அகற்றப்பட்டு தூர் வாரப்படவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதனால் மழைக்காலங்களில் சென்னை புறநகர் பகுதிகளான பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், நங்கநல்லூர், ஆதம்பாக்கம், உள்ளகரம், மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்காமல் விரைவாக வெளியேற கூடிய நிலை ஏற்படும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

சதுப்பு நிலத்தை முறையாக பாதுகாத்து முழுமையான பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.