ஓடும் ரெயிலில் பயணியிடம் ரூ.3¼ லட்சம் நகை, பணம் பறிப்பு மர்மநபர் கீழே குதித்து தப்பி ஓட்டம்
ரெயில் மெதுவாக சென்றபோது தூங்கிக்கொண்டிருந்த பயணியிடம் ரூ.3¼ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்மநபர் பறித்துக்கொண்டு கீழே குதித்து ஓடிய சம்பவம் பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோலார்பேட்டை,
ஆந்திர மாநிலம் செகந்தராபாத்தை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 35). இவர் கடந்த வாரம் திருவனந்தபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றார். பின்னர் அங்கிருந்து கடந்த 10-ந் தேதி இரவு ஐதராபாத் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட எஸ்.4 பெட்டியில் பயணம் செய்தார்.
அந்த ரெயில் நள்ளிரவு 12 மணியளவில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடைந்தபோது ஜான்சன், தான் கொண்டு வந்த பையை தலையணையாக வைத்து தூங்கிக்கொண்டிருந்தார். ரெயில் ஜோலார்பேட்டையை கடந்து சென்றபோது கேத்தாண்டபட்டி ரெயில் நிலையம் அருகே சிக்னல் கிடைக்காததால் ரெயிலின் வேகத்தை டிரைவர் குறைத்தார். இதனால் ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது.
கீழே குதித்து ஓட்டம்
அப்போது அதே பெட்டியில் பயணம் செய்த மர்மநபர் ஒருவர் ஜான்சனின் பையை எடுத்தார். திடீரென விழித்த ஜான்சன் கூச்சலிட்டார். ஆனால் அந்த நபர் பையுடன் ரெயில் மெதுவாக சென்றதை பயன்படுத்தி இருளில் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார். அந்த பையில் 15 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் இருந்துள்ளது.
பின்னர் அந்த ரெயில் காட்பாடியை அடைந்தது. அங்கு சிறிது நேரமே நின்றதால், ஜான்சனால் அங்கு புகார் கொடுக்க முடியாமல் போனது. இந்த நிலையில் ரெயில் விஜயவாடா சென்றதும் அங்குள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் சம்பவம் நடந்த இடம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டதால், வழக்கை அங்கு மாற்றம் செய்து அனுப்பி உள்ளனர்.
அடிக்கடி சம்பவம்
ஜோலார்பேட்டை பகுதியில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே ரெயில்வே பாதுகாப்பு படையினர் இந்த பகுதி வழியாக செல்லும் ரெயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் தீவிர கண்காணிப்பு செய்தால் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபரை பிடித்து விடலாம் என பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story