மாவட்ட செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் + "||" + Srivaikuntam In the Kallapiran Swamy temple Chithirai festival

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

ஸ்ரீவைகுண்டம்
கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் நேற்று சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஸ்ரீவைகுண்டம்,

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் நேற்று சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சித்திரை திருவிழா

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களில் முதலாவது தலமும், சூரியன் தலமுமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் சுவாமி தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடு, தங்க மசகிரியில் வைத்து திருமஞ்சனம், தீர்த்த வினியோக கோஷ்டி நடந்தது.

தினமும் மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஒவ்வொரு திருநாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர் சார்பில் கொண்டாடப்படுகிறது. 5-ம் திருநாள் காலையில் மங்களாசாசனம், இரவில் கருடசேவை நடந்தது.

தேரோட்டம்

9-ம் திருநாளான நேற்று சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலை 5.30 மணிக்கு சுவாமி கொடிமரம் சுற்றி எழுந்தருளல் நடந்தது. பின்னர் காலை 6 மணிக்கு சுவாமி கள்ளபிரான் தேரில் எழுந்தருளினார். காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு முத்தாரம்மன் கோவில் தெரு வழியாக தேவர் சிலையை கடந்து காலை 11.30 மணிக்கு கோவில் முன்பு வந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தேர், கோவில் முன்பு இருந்து மீண்டும் புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலைக்கு வந்தது. இரவு 9 மணிக்கு சுவாமி பல்லக்கில் தவிழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் திருவீதி புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நீர்மோர் பந்தல்

திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, காங்கிரஸ் டேனியல் ஆகியோர் சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த தேரோட்டத்தில் நாசரேத் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் மணிமொழியன் ரங்கசாமி, இந்திய கலாசார பண்பாட்டு அறக்கட்டளை முருகன், கந்தசிவசுப்பு மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

10-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சோரநாதர் எழுந்தருளி தீர்த்தவாரி, காலை 11 மணிக்கு தீர்த்த வினியோக கோஷ்டி, இரவு 9 மணிக்கு வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் விசுவநாத், கோவில் ஆய்வாளர் ரவீந்திரன், தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர். பாதுகாப்பு பணியில் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.