கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பெண்ணிடம் 5½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு


கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பெண்ணிடம் 5½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 14 May 2018 3:45 AM IST (Updated: 14 May 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பெண்ணிடம் 5½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி,

புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில், தற்போது கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காட்சிகளை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

சுற்றுலா பயணிகளின் கூட்டத்தை பயன்படுத்தி நகை திருடும் கும்பல் ஊடுருவி கைவரிசை காட்டி வருகிறார்கள்.

நேற்று அதிகாலை தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 60 பேர் கன்னியாகுமரியை சுற்றி பார்க்க தனியார் பஸ்சில் வந்தனர். அதிகாலை 3 மணிக்கே அவர்கள் வந்து விட்டதால் கடற்கரை சாலையில் பஸ்சை ஒதுக்கி அதில் இருந்தவர்கள் ஆங்காங்கே படுத்து தூங்கினர்.

தங்க சங்கிலி பறிப்பு

அவர்களுடன் சசிகுமார் மனைவி கிருத்திகா (வயது 27) என்பவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அங்கு வந்து கிருத்திகா கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடினார்.

நகை பறிக்கப்பட்டதை உணர்ந்த கிருத்திகா, சத்தம் போட்டு அலறினார். அவருடன் வந்தவர்கள் நகை பறித்து ஓடிய வாலிபரை துரத்தி சென்றனர். அதற்குள் அந்த வாலிபர் ஓடி தலைமறைவானார்.

இதுகுறித்து கிருத்திகா கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி நகை பறித்து சென்ற நபரை தேடி வருகிறார்கள். 

Next Story