ஒரே இடத்தில் 896 பள்ளிக்கூட வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு


ஒரே இடத்தில் 896 பள்ளிக்கூட வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 15 May 2018 11:23 PM GMT (Updated: 15 May 2018 11:23 PM GMT)

மதுரை ஆயுதப்படை போலீஸ்மைதானத்தில் நேற்று 896 பள்ளிக்கூட வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிறுத்தப்பட்டன. அவைகளில் தீயணைப்பு, வேககட்டுப்பாட்டுகருவி, முதலுதவிபெட்டி போன்றவை சரியாக உள்ளனவா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மதுரை,

பள்ளிக்கூட வாகனங்களின் ஆய்வு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது. மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூட வாகனங்களும் ஆய்வுக்காக இங்கு வரிசையாக அணிவகுத்து நிறுத்தப்பட்டு இருந்தன. அதனை கலெக்டர் வீரராகவராவ் பார்வையிட்டார்.

அதைதொடர்ந்து கலெக்டர் வீரராகவராவ் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க போக்குவரத்து துறையின் மூலம் மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி வாகனங்களிலும் தகுதியை கண்டறிவதற்கான கூட்டாய்வு ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆர்.டி.ஓ., வட்டார போக்குவரத்து அலுவலர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்டோரை கொண்ட மாவட்ட அளவிலான போக்குவரத்து குழு இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள 896 பள்ளி வாகனங்களில் உள்ள படிக்கட்டின் உயரம் தரை மட்டத்தில் இருந்த 25 முதல் 30 சென்டிமீட்டர் அளவு உள்ளனவா, அவசர வழி, மருந்துகளுடன் கூடிய முதலுதவி பெட்டி, ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெற்ற இரண்டு தீயணைப்பு கருவிகள், வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்டவை உள்ளனவா என சரிபார்க்கப்படுகிறது. ஆய்வின் போது கண்டறியப்படும் குறைபாடுகள் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படும். போக்குவரத்து குழு உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்த பின்பே பள்ளி வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படும். மேலும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பள்ளி வாகனங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

சாலை விதிகளை அனைவரும் கடைபிடித்திட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி வாகனங்களில் ஓட்டுனராக பணிபுரிபவர்கள் பாதுகாப்பான முறையில் வாகனத்தை இயக்க வேண்டும். அவர்கள் சாலை விதிகளை பின்பற்றி மாணவர்களுக்கு முன்உதாரணமாக திகழவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story