பொதுமக்கள் அதிக அளவில் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும்; கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி அறிவுரை


பொதுமக்கள் அதிக அளவில் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும்; கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி அறிவுரை
x
தினத்தந்தி 16 May 2018 5:10 AM IST (Updated: 16 May 2018 5:10 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் அதிக அளவில் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும் என கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி அறிவுறுத்தினார்.

திருப்பூர்,

பொதுமக்கள் அதிக அளவில் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ரத்ததான அமைப்புகளுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-

தொற்றுநோய் இல்லாத 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு ரத்ததானம் செய்வதால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. மருத்துவர்கள் ரத்ததானம் செய்யும் நபரை முழுமையாக பரிசோதித்த பின்னரே அந்த நபரிடம் இருந்து ரத்தத்தை தானமாக பெற்றுக்கொள்ள வேண்டும்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த ரத்ததானத்தை ஊக்கப்படுத்தி அனைவரும் ரத்ததானம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வருடத்துக்கு ஒரு ரத்ததான முகாம் நடத்தப்படுவதை மாற்றி ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற முகாம்கள் நடத்த தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் அனைவரும் இதுபோன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் தங்களை ரத்த கொடையாளராக இணைந்து கொள்ள வேண்டும். ரத்ததானம் அளிப்பதனால் நம் உடலில் எந்த ஒரு உபாதையும் ஏற்படாது என்பது குறித்து மருத்துவ அலுவலர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதிகளவில் ரத்தம் வழங்கும் கொடையாளர்கள் மாவட்ட நிர்வாகத்தால் கவுரவிக்கப்படுகிறார்கள். அவசர நேரங்களில் குறிப்பாக விபத்துக்களின் போது நிலைமையை புரிந்து நாம் அனைவரும் எந்த ஒரு பயமுமின்றி துணிவுடன் ரத்தம் வழங்க வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி பல்வேறு சமூக பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் அதிக அளவில் மரம் நடுவது, நீர்நிலைகளை தூய்மைப்படுத்துவது மற்றும் நீர்நிலைகளை ஆழப்படுத்துவது உள்பட சமூக பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற பணிகளில் ஈடுபடும் தன்னார்வ குழுக்களுக்கு மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும்.

புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை நாம் மறந்து வருகிறோம். பொது அறிவு சார்ந்த புத்தக கண்காட்சிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் தன்னார்வ குழுக்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும். எனவே அனைத்து தன்னார்வ குழுக்களும் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருங்கால சந்ததியினருக்கு முன்மாதிரியாக திகழ செய்வதோடு உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கு பொதுமக்கள் அதிக அளவில் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) சாந்தகுமார், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சவுந்தர்ராஜன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜெயந்தி, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story