மாவட்டங்களில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு


மாவட்டங்களில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு
x
தினத்தந்தி 15 May 2018 11:48 PM GMT (Updated: 2018-05-16T05:18:09+05:30)

திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள மத்தூரை சேர்ந்தவர் சின்னக்குப்பன் (வயது 61). இவர் திருவள்ளூரை அடுத்த காக்களூர் எஸ்டேட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் அவர் பணியை முடித்துக் கொண்டு திருவள்ளூர் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.

அவர் காக்களூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சின்னக்குப்பனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த கொத்தியம்பாக்கத்தை சேர்ந்தவர் ஏழுமலை (55). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் ஏழுமலை வேலையின் காரணமாக கீழ்மணம்பேடு சென்றார். பின்னர் அவர் வேலையை முடித்துக்கொண்டு அந்த வழியாக வந்து கொண்டிருந்தார்.

அவர் சாலையை கடக்க முயன்றபோது பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் வேடந்தாங்கல் சாலை வையாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் தினேஷ் பாபு (24). கட்டிட தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் தனது நண்பர் சச்சிதானந்தம் (40) என்பவருடன் தனது மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி சென்றார். பின்னர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கல்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

இரவு சீக்கினாங்குப்பம் அடுத்த பெருந்துறவு என்ற கிராமம் அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தினேஷ்பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் சச்சிதானந்தம் படுகாயம் அடைந்தார்.

தகவல் அறிந்த கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். படுகாயம் அடைந்த சச்சிதானந்தம் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Story