சட்டசபை தேர்தல்: 16 மந்திரிகள் தோல்வியை தழுவினர்


சட்டசபை தேர்தல்: 16 மந்திரிகள் தோல்வியை தழுவினர்
x
தினத்தந்தி 15 May 2018 11:50 PM GMT (Updated: 15 May 2018 11:50 PM GMT)

முதல்-மந்திரி சித்தராமையாவின் மந்திரி சபையில் இடம் பெற்று தேர்தலில் போட்டியிட்ட 16 மந்திரிகள் தோல்வியை தழுவினர்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இந்த தேர்தலில் சித்தராமையாவின் மந்திரி சபையில் இடம்பெற்றிருந்த 16 மந்திரிகள் தோல்வியை தழுவினர். 14 மந்திரிகள் வெற்றி பெற்றனர். அதன் விவரங்கள் வருமாறு:-

வெற்றி பெற்ற மந்திரிகள்

கார்வார் மாவட்டம் ஹலியால் தொகுதியில் போட்டியிட்ட தொழில்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே, கதக் தொகுதியில் களம் கண்ட கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை மந்திரி எச்.கே.பட்டீல், மங்களூரு தொகுதியில் போட்டியிட்ட உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி யு.டி.காதர், விஜயாப்புரா மாவட்டம் பபலேஷ்வரா தொகுதியில் களம் கண்ட நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல், ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பெங்களூரு பி.டி.எம். லே-அவுட்டில் போட்டியிட்ட உள்துறை மந்திரி ராமலிங்கரெட்டி, பெங்களூரு சிவாஜி நகர் தொகுதியில் களம் இறங்கிய நகர வளர்ச்சித்துறை மந்திரி ரோஷன்பெய்க், பெங்களூரு சர்வக்ஞநகர் தொகுதியில் போட்டியிட்ட பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ், பெங்களூரு பேடராயனபுரா தொகுதியில் போட்டியிட்ட விவசாயத்துறை மந்திரி கிருஷ்ணபைரேகவுடா, கலபுரகி மாவட்டம் சித்தாபுரா தொகுதியில் போட்டியிட்ட தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்துறை மந்திரி பிரியங்க் கார்கே, பீதர் மாவட்டம் பால்கி தொகுதியில் போட்டியிட்ட நகரசபை நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் வளர்ச்சித்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே, மைசூரு நரசிம்மராஜா தொகுதியில் போட்டியிட்ட உயர்கல்வித்துறை மந்திரி தன்வீர் சேட், கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் தொகுதியில் களம் கண்ட சுகாதாரத்துறை மந்திரி ரமேஷ் குமார், பெலகாவி மாவட்டம் கோகாக் தொகுதியில் களம் இறங்கிய சிறுதொழில் துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

தோல்வி அடைந்த மந்திரிகள்

துமகூரு மாவட்டம் சிராவில் போட்டியிட்ட சட்டத்துறை மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா, தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தொகுதியில் வனத்துறை மந்திரி ரமாநாத் ராய், மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தொகுதியில் பொதுப்பணித்துறை மந்திரி மகாதேவப்பா, சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தொகுதியில் கூட்டுறவுத்துறை மந்திரி கீதா மகாதேவபிரசாத், சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தொகுதியில் சமூக நலத்துறை மந்திரி எச்.ஆஞ்சனேயா, பாகல்கோட்டை மாவட்டம் தெரதால் தொகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி உமாஸ்ரீ, கலபுரகி மாவட்டம் சேடம் தொகுதியில் மருத்துவகல்வித்துறை மந்திரி சரணபிரகாஷ் பட்டீல் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

தார்வார் தொகுதியில் கனிமம் மற்றும் புள்ளியல் துறை மந்திரி வினய்குல்கர்னி, ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தொகுதியில் கால்நடைத்துறை மந்திரி ஏ.மஞ்சு, ஹாவேரி தொகுதியில் ஜவுளி மற்றும் அறநிலையத்துறை மந்திரி ருத்ரப்பா லமானி, சிவமொக்கா மாவட்டம் சாகர் தொகுதியில் வருவாய்த்துறை மந்திரி காகோடு திம்மப்பா, தார்வார் மாவட்டம் கல்கட்டகியில் தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் லாட், கொப்பல் மாவட்டம் எலபூர்காவில் தொடக்க கல்வித்துறை மந்திரி பசவராஜ் ராயரெட்டி, ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் போக்குவரத்து துறை மந்திரி ரேவண்ணா, தாவணகெரே வடக்கு தொகுதியில் தோட்டக்கலைத்துறை மந்திரி எஸ்.எஸ்.மல்லிகார்ஜூன், உடுப்பியில் மீன்வளத்துறை மந்திரி பிரமோத் மத்வராஜ் ஆகியோர் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர். 

Next Story