குடி பழக்கம் குடும்பத்தை சீரழித்தது விஷம் குடித்த தாய் சாவு தற்கொலைக்கு முயன்ற மகனுக்கு தீவிர சிகிச்சை


குடி பழக்கம் குடும்பத்தை சீரழித்தது விஷம் குடித்த தாய் சாவு தற்கொலைக்கு முயன்ற மகனுக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 17 May 2018 3:45 AM IST (Updated: 17 May 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

குடி பழக்கத்துக்கு அடிமையான மகனால் மனம் உடைந்த தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதே போல் தற் கொலைக்கு முயன்ற மகனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரூர்,

கரூர் அருகே புலியூர் வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நர்மதா (வயது 25). இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த கொத்தனார் மணிகண்டனுக்கும் (32) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன் பிறகு தனது மனைவியின் வீட்டிலேயே மணிகண்டன் வசித்தார். தனது தாய் மலர்கொடியையும் (55) தனது மாமனார் வீட்டிலேயே வைத்திருந்தார்.

இந்நிலையில் மணிகண்டன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து நர்மதாவுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக நர்மதா தனது வீட்டிலிருந்து கிளம்பி உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் தனது மகனுக்கு எவ்வளவு அறிவுரை கூறியும் குடும்பத்தை வழிநடத்தாமல் இப்படி குடித்து விட்டு சுற்றுகிறானே? என எண்ணி மலர்கொடி மிகுந்த வருத்தத்தில் இருந்தார்.

விஷம் குடித்து உயிரை மாய்த்தார்

இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி மணிகண்டன் திடீரென விஷம் குடித்துவிட்டு வீட்டுக்கு வெளியே கிடந்தார். அப்போது இதுபற்றி தனது நண்பர்களுக்கு செல்போனில் அவர் தகவல் தெரிவித்தார். இதையறிந்து பதறிப்போய் அங்கு வந்த நண்பர்கள் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது தான் தனது தாயும் விஷம் குடித்து விட்டதாக பகீர் தகவலை மணிகண்டன் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்த போது மலர்கொடி விஷம் குடித்து இறந்து கிடந்தது தெரிய வந்தது. அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி துடித்தனர். மணிகண்டனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இதற்கிடையே இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து மற்றும் போலீசார் அங்கு வந்து மலர்கொடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த போது மணிகண்டனுக்கும், மலர்கொடிக்கும் நடந்த வாக்குவாதம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபழக்கத்தால் குடும்பமே சீரழிந்த சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story