பிளஸ்-2 தேர்வில் கரூர் மாவட்டத்தில் 93.85 சதவீதம் பேர் தேர்ச்சி


பிளஸ்-2 தேர்வில் கரூர் மாவட்டத்தில் 93.85 சதவீதம் பேர் தேர்ச்சி
x
தினத்தந்தி 17 May 2018 4:15 AM IST (Updated: 17 May 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 தேர்வில் கரூர் மாவட்டத்தில் 93.85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 13-வது இடத்தை பிடித்துள்ளனர்.

கரூர்,

பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவு குறித்து கரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேஷ் மூர்த்தி கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தில் நடந்த பிளஸ்-2 தேர்வினை 102 பள்ளிகளிலிருந்து 5,470 மாணவர்கள், 5,807 மாணவிகள் என மொத்தம் 11,277 பேர் எழுதினர். இதில் 5,054 மாணவர்களும், 5,529 மாணவிகளும் என 10,583 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். தேர்ச்சி சதவீதம் 93.85 ஆகும். இது கடந்த ஆண்டை விட (94.96 சதவீதம்) 1.11 சதவீதம் குறைந்திருப்பது சற்று வருத்தம் அளிக்கிறது. எனினும் மாநில அளவில் கடந்த ஆண்டை போலவே தற்போதும் கரூர் மாவட்டம் 13-வது இடத்தை பிடித்திருப்பது ஆறுதலாக உள்ளது.

50 அரசு பள்ளிகளில் பயின்ற 5,235 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 4,724 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 90.24 ஆகும். மேலும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளில் கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் 2 பேர் தேர்வு எழுதி 2 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் 2 பேர் தேர்வு எழுதி 2 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதர வகை மாற்றுத்திறனாளிகள் 3 பேர் தேர்வு எழுதி 3 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். உடல் ஊனமுற்றோரில் 18 பேர் தேர்வு எழுதியதில் 16 பேர் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளை கணக்கெடுத்து தலைமை ஆசிரியர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி இனி வரும் காலங்களில் அதிகரிக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story